«

»

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் காரைநகருக்கு பெருமை சேர்த்த சேவையாளர்கள் கௌரவிப்பும், மாணவர்களுக்கான பரிசளிப்புக்களும்.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரால் காரைநகருக்கு பெருமை சேர்த்த சேவையாளர்கள் கௌரவிப்பும், மாணவர்களுக்கான பரிசளிப்புக்களும்.

கலை, கல்வி, பண்பாட்டிலும், கலாச்சாரத்திலும், செல்வ வளத்திலும் மனிதவளத்திலும் சிறப்புப் பெற்றது எமது கிராமம். வாழ்வியல் சடங்குகள், சம்பிரதாயங்கள் பழக்கவழக்கங்களைப் பொறுத்தவரையில் குலமரபு வழக்கமும் வழக்காறுகளம் பெருஞ் செல்வாக்குச் செலுத்துகின்ற வேளையில் புவியல் அமைவிடச்சிறப்பும் மனிதவாழ்விற்கு வளமான நிலப்பரப்பாக அமைகின்றது.

புத்திஜீவிகள், வானியல்விற்பன்னர்கள், சோதிடர்கள், வைத்திய கலாநிதிகள், பொறியியலாளர்கள்,விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள், வாழ்நாள்பேராசிரியர்கள், நியாயதுரந்தரர்கள், அப்புக்காத்தர், நொத்தாரீசுமார், முகாந்தரங்கள், விதானைமார், உடையார், வித்துவான்கள், புலவர்கள், பண்டிதமணிகள், ஆங்கில ஆசான்கள், தமிழ் ஆசான்கள், ஒப்பந்தக்காரர்கள், வர்த்தகர்கள், அரசியல்வாதிகள், தொல் பொருள் ஆய்வாளர்கள், ஆன்மீக வள்ளல்கள் (பேப்பர் சுவாமி, செல்லம்மா சாமி) தவில் நாதஸ்வர வித்துவான்கள் ( சுப்பையா கம்பர், கைலாயக் கம்பர், கணேசன், வீராச்சாமி) இசை நடனக் கலைஞர்கள் எனப் பல துறைகளிலும் சிறந்த மேதைகளைக்கொண்டு பெருஞ் செல்வாக்குடன் விளங்குகின்ற கிராமமே காரைநகர்.

பெருளாதார நிபுணர் அடம்சிமித் அவர்களின் கொள்கைக்கு இணங்க “மனித தேவைகள் அளவிறந்தவை” என்ற கூற்றுக்கிணங்க எமது ஊரின் பல்துறை சார்ந்த விற்பன்னர்கள் பல தேசங்களில் பரந்து வாழ்ந்தாலும் கிராமத்து சமகாலத்து பொருளாதார வளர்ச்சிக்கும், பண்பாட்டு விழுமியங்களையும், பாரம்பரியங்களை வெளிக்கொணர்வதில் முன்நின்று சேவையாற்றி வருகின்றனர் எனலாம்.

வருங்கால சந்ததியினர் எமது தொன்மையை, பாரம்பரியத்தை, பண்பாட்டை இழந்து விடக்கூடாது. எமது ஊர் என்று பெருமை பேசுவதை விட எமது பாரம்பரியங்களையும், பண்பாட்டையும் பேணிக்காப்பதில் ஒவ்வோருவரும் முயற்சி எடுக்க வேண்டும். அதுவே நாம் எமது ஊருக்குச் செய்யும் கடப்பாடாகும்.

எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
இருந்ததும் இந் நாடே – அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந் நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந் நாடே – இதை
வந்தனை கூறி மனதில் இருத்தி என்
வாயுற வாழ்த்தேனோ?
என்றார் பாரதியார்.

 

2014ம் ஆண்டிலிருந்து சுவிஸ் காரை அபிவிருத்திச் சபை ஆண்டுதோறும் மாணவர்களுக்கான ஆளுமை விருத்திப் போட்டிகளையும் பரிசளிப்பு விழாவையும், கலைநிகழ்வுகளையும் காரைநகரிலும், சுவிற்சர்லாந்திலும் நடாத்திவருகின்றமை யாவரும் அறிந்ததே! இவ் விழாக்களில் எமது ஊருக்குச் சேவையாற்றிய கல்வியாளர்களையும் கலைஞர்களையும் இன்னபிற சேவையாளர்களையும் மதிப்பளிப்பதன் மூலம் எம் இளையவர்களுக்கு அவர்களை முன்னுதாரணங்காட்டுவதும் அவ்விழாக்களின் ஒரு பகுதியாக இடம்பெற்று வருகிறது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையால் 08-06-2014இல் பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காரைத்தென்றல் நிகழ்வில் ஊடகவியளாளர் திரு இளையதம்பி தயானந்தா தலைமையில் வெளியீட்டு வைக்கப்பட்ட சிறப்பு மலராகிய காரைநிலா -2014ஐ எமது ஊரவருக்கும், ஆசிரியருக்கும், மாணாக்கருக்கும், தெரியப்படுத்தும் நோக்குடன் நடராசா ஞாபகார்த்த மண்டபம் கலாநிதி ஆ. தி. ம. ம. வித்தியாலயம், காரைநகர் 2014- 09- 07 (ஞாயிற்றுக் கிழமை) காலை 8;.30 மணிக்கு நூல் அறிமுகவிழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தோம். இவ் விழாவில் எமது கிராமத்தில் பல நீண்ட காலமாக மாணவர்களுக்காக பணியாற்றிவருபவரும், பல நூல்களைப் பதிப்பித்ததன் மூலம் சைவத்திற்கும், தமிழிற்கும் உழைத்து வருபவருமாகிய மதிப்புக்குரிய கலாநிதி சிவஸ்ரீ க. வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களையும் மாணவர்களின் சொத்தாகக் கருதப்படும் இரண்டு நூலகங்களை உருவாக்குவதிலும், வளர்ப்பதிலும் பங்கேற்றுப் பெரும் தொண்டாற்றி வரும் ஓய்வு பெற்ற மருத்துவர் (RMP) சி. நடராசா அவர்களும் கௌரவிக்கபட்டிருந்தனர். இவர்களில் சிவஸ்ரீ க. வைத்தீஸ்வரக் குருக்கள் அவர்களின் மங்கல வாழ்த்துப்பாவினை பதிவு செய்கின்றோம்.

சிவத்தமிழ் வித்தகர், பண்டிதைமணி,கலாநிதி
மூதறிஞர் சிவத்தி க. வைத்தீசுவரக்குருக்கள் அவர்களின்
நூலக சேவையைப் பாராட்டும் வகையில்
2014.09.07 இல் சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினரும்
காரை நிலா மலர் அறிமுக விழாக் குழுவினரும்,
வாழ்த்தி வழங்கிய

மங்கல வாழ்த்துப்பா
திணை – பாடான்                                                              துறை – வாழ்த்தியல்

(எண்சீர்க்கழி நெடிலாசிரிய விருத்தம்)

ஈழத்து வடபுலமாம் காரை நகரில்
இனித்துறையும் சிதம்பரத்தான் எமக்கா மீந்த
அழமுற நூல் வேதம் அறங்கம் தேர்ந்தே
அகத்தூய்மை புறத்தூய்மை வாழ்வு மாகி
அழமான பக்தியுடன் பூசை களாற்றி
அமையுற ஆன்றோரை உறுவாய்கொண்டும்

தோழமையாய் எந்நாளும் மக்கள் துயரைத்
துடைத்திடுவார் கலாநிதியெம் வைத்தீசுவரரே

மீடுயரும் விழாவெடுத்து மகிழ்ச்சி பொங்கப்
பெரு விருப்பாய்ச் சங்கத்தார் ஒன்ற கூடி
நாடுபுகழ் நின்னையே நயந்து வேண்டி
நற்கருமஞ் செய்தமையால் அழைத்தா ருன்னை
கூடுசபை யினரன்பால் நின்னை யேத்திக்
குவிந்த நூலக்கமெல்லாம் நிரையாய் சொன்னார்
பாடுபுகழ் நலஞ்சிறக்க பரவிக் கொள்வோம்
பல்லாண்டு நின்புகழே வாழி! வாழி!

ஈழத்துச் சிதம்பரனார் புராணம் வேண்ட
இளமுருகனார் தானுமன்பால் அதனைச் செய்தார்
சூழவரும் பெருமைதாய் மொழியின் ஆக்கம்
செய்திடவே தமிழ்வளர்ச்சி கழகங் கண்டீர்
வாழுமன்பர் வெளிநாட்டில் நின்னைச் சேர்ந்தே
வகுத்தநின் செயலுக்காய் ஊக்கமானார்
ஆழமாய்க் கடலிருக்கும் முத்தா யிருந்தே
அருங்செயல்கள் ஆற்றுவீர் வாழி! வாழி!

ஆண்டி கேணிஜயன் புராண மோடு
ஆய்ந்தநற் பதிப்புக்கள் அநந்தம் அநந்தம்
மாண்புறு புலவரெல்லாம் செய்த நூல்கள்
மல்கு நீர் காரைநகர் எங்கணு மாகி
தூண்டுசுடர் வைத்தீசு வரனார் மலரின்
செய்தியெல்லாம் கேட்டுலகம் வியந்த தன்றோ
ஈண்டுறையும் நூலகமும் இனிதே கண்டோம்
இனிதுநின் மாண்பெல்லாம் வாழி! வாழி!

(நேரிசை வெண்பா)
இனித்த செயலும் இணங்கியநல் வாழ்வும்
பணியாய் என்றும் பரவும் – பணிவுடைய
சேவையால் வாழ்வான் திருவுடையான் என்றென்றும்
சேவையே இன்பத் திருப்பு

நூறாண்டு காணும் ஐயா வாழ்க!
பல்லாண்டு இனிது வாழ்க வாழ்கவே

   வாழ்த்தி வழங்கியோர்
சுவிஸ் – காரை அபிவிருத்திச் சபையினரும்,
காரைநிலா நூலறிமுக விழாக்குழுவினரும்.
காரைநகர்
2014-09-07

 

காரைத்தென்றல்-2014இல் சரஸ்வதி வித்திலாலய அதிபர்(சுவிஸ்) திருமதி. தாரணி சிவசண்முகநாதசர்மா அவர்களுக்கு கலையரசி விருது வழங்கி மதிப்பளித்தது.
காரைத்தென்றல் -2015 நிகழ்வில் தொழில் அதிபர் திரு.சுப்பிரமணியம் கதிர்காமநாதன் அவர்களுக்கு “அறக்கொடை அரசு” என்னும் விருது வழங்கியும், நாஸ்வர தவில் வித்தவான்களான கோவிற்குளம் வீராச்சாமி அரிகரபுத்திரன் அவர்களுக்கு “லயகேசரி” விருதும், உடுப்பட்டி பத்மநாதன் செந்துரன் அவர்களுக்கு “சிவநாத லயவாரிதி” விருதும். சுதுமலை நாகராசா மதுசூதனன் அவர்களுக்கு “சுவிஸ்நாதச் சாரல்” விருதும், திருமலை முத்துலிங்கம் யோகேஸ்வரன் அவர்களுக்கு “ஸ்வரஞான வேந்தன்” விருது வழங்கியும் மதிப்பளித்தது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் நடாத்திய இரண்டாவது ஆண்டுக் கட்டுரைப் போட்டிக்கான பரிசளிப்பும் அவர்கள் மூன்றாவது ஆண்டாக தயாரித்த நாட்காட்டி வெளியீடும் அவர்களது சான்றோர், கலைஞர்கள் கௌரவிப்பு ஆகியன ஆயிலி சிவஞானோதய வித்தியாலயத்தில் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்த முப்பெரும் விழா 24.12.2015இல் காரைநிலா-2014 நூல் ஆசிரியர் கலாபூசணம்,பண்டிதை யோகா சோமசுந்தரம் அவர்களுக்கு, “செந்தமிழ் காவலர்” பட்டம் வழங்கியும், மன்றத்திற்கான கீதம் இயற்றிய தமிழ்மணி திரு. அகளங்கன் அவர்களுக்கு “கலைமாமணி” பட்டம் வழங்கியும், எமது கிராமத்தின் தவில் வித்துவான் கலாபூசணம், கைலயாய கம்பர் வீராச்சாமி அவர்களுக்கு “லயச் சக்கரவர்த்தி” விருது வழங்கியும் மதிப்பளித்தது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையினர் காரை அபிவிருத்திச் சபையுடன் இணைந்து கடந்த 09 – 01 – 2017 அன்று யாழ்ரன் கல்லூரியில் அதன் அதிபர் வே. முருகமூர்த்தி தலைமையில் நடாத்திய “முப்பெரும் விழா – 2017” இல் முன்னாள் அதிபர் மதிப்பிற்குரிய கதிரவேலு தில்லையம்பலம் ஐயா அவர்களுக்கு “கல்விக் காவலர்” விருது வழங்கியும் கலாபூஷணம், பண்டிதர் மு. சு. வேலாயுதபிள்ளை அவர்களுக்கு “தமிழ்த் தொண்டன்” விருது வழங்கியும், சித்தாந்த வித்தகர், கலாபூஷணம் அவர்களுக்கு சேவைகளை பாராட்டும் வாழ்த்துப்பாவினை வழங்கியும் மதிப்பளித்தது.

இலண்டன் கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியர் ஆறுமுகம் நல்லநாதன் அவர்கள் மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் சார்ந்த பல ஆராய்ச்சிச் சஞ்சிகைகளின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்ற பெருமை கொண்டவர். மேற்படி துறைகளின் மிகச் சிறந்த ஆய்வு மாநாடுகளின் ஏற்பாட்டுக்குழுக்களில்; உறுப்பினராவிருந்தவர். மின்னியல் மறறும் இலத்திரனியல் பொறியியல் சாரந்த தகவற் தொழிநுட்பத்திற்கான சங்கத்தினரது உயர்ந்த சேவையாளர் என்;னும் விருதை இருமுறை பெற்றுக்கொண்டவர். ஆறுமுகம் நல்லநாதன் அவர்களை நேரடியாகச் சந்தித்த எமது சபையின் முன்னை நாட் தலைவர் பூபாலபிள்ளை விவேகானந்தா அவர்கள் தம் செந்தமிழால் இயற்றப்பட்ட வாழ்த்துப்பாவையும் ஆங்கில வாழ்த்துப் பாவையும் வழங்கி மதிப்பளித்தார்.

“அடிசில் வினையும் யாழின் துறையும்
கடிமலர்ச் சிப்பமும் கரந்துறை கணக்கும்
வட்டிகை வரைப்பின் வாக்கின் விகற்பமும்
கற்றவை எல்லாம் காட்டுமின் எமக்கு”
                                                                                                 கொங்கு வேளிர் என்பார் எழுதிய
                                                                                              பெருங்கதை என்னும்
                                                                                                   உதயண குமார சரித்திரத்திலிருந்து
                                                                                            (1.34.166-9)

சபையின் பத்தாவது ஆண்டை முன்னிட்டு 2014ஆம் ஆண்டு காரைத்தென்றல் நிகழ்வில் காரைநிலா நூல் ஒன்றை வெளியீடு செய்தோம் இன் நூலிற்கு மாணவர்களின் ஆக்கங்கள் வெகு குறைவாகவே காணப்பட்டன அதானால் உலகில் பரந்து வாழும் காரைநகர் மேல் பிரிவு மாணவருக்கான கட்டுரைப் போட்டியை நடாத்தி வெற்றிபெற்ற மாணவருக்கான பரிசில்களை பண்டிதை செல்வி. யோகலட்சுமி சோமசுந்தரம் தலைமையில் வெற்றியிட்டிய மாணவர்களுக்கு ஈழத்து சிதம்பர சிவன் கோவிலில் திருவாருவாதிரை நாளில் ஈழத்துச் சிதம்பர வசந்த மண்டபத்தில் காரைநகர் மணிவாசகர் சபையுடன் இணைந்து பரிசில்களை வழங்கியிருந்தோம்
• செல்வன் ஜெயபாலசிங்கம் நிசாந்தன், கொழும்பு இந்துக் கல்லூரி,
காரை இளவறிஞர் விருது – 2014
• செல்வி துஷ்யந்தினி அரியபுத்திரன் யா/கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி காரை இளஞ்சுடர் விருது–2014
• செல்வி சாந்தினி கனகலிங்கம் யா/கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி
காரைத் தென்றல் விருது – 2014
ஐந்து மாணவருக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்கப்பட்டன

2015ஆம் ஆண்டு போட்டியாளர்களின் பங்குபற்றலை அதிகரிக்கவும், பரிசில்களை அதிகரித்து அதிகளவு மாணாக்கரை ஊக்குவிக்கவும் எமது சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய யா/ கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயத்தின் சயம்பு மண்டபத்திலும், சூரிச் சரஸ்வதி வித்தியபலயத்திலும். 26.09.2015இல் கட்டுரைப் போட்டி பின்வரும் மூன்று பிரிவுகளில் நாடாத்தப்பட்டது.
(அ) கீழ்ப்பிரிவு 7ஆம், 8ஆம், 9ஆம் கல்வியாண்டு மாணவர்கள,;
(ஆ) மத்தியபிரிவு 10ஆம்,11ஆம், கல்வியாண்டு மாணவர்கள்.
(இ) மேற்பிரிவு 12ஆம்,13ஆம் பாடாலையில் கல்வி பயிலும் மாணவர்களும் இவ்வாண்டு பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகி கல்விபயிலும் மாணவர்களும் பரீட்சையில் தோற்றினார்கள்.
• செல்வன் ஜெயபாலசிங்கம் நிசாந்தன், கொழும்பு இந்துக் கல்லூரி,
காரை இளவறிஞர் விருது – 2015
• செல்வி தீபிகா நவரத்தினம் யா/ கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வி
காரை இளஞ்சுடர் விருது – 2015
• செல்வி நவநிலா மகாதேவன் யா/ யாழ்ற்னர் கல்லூரி
காரைத் தென்றல் விருது – 2015

ஒவ்வொரு பிரிவும் பத்து மாணவருக்கு ஆறுதல் பரிசில்கள் வழங்பட்டன.

09.01.2017 திங்கட்கிழமை எமது தாய் சங்கமான காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து காரைநகரின் வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட அமரர் கலாநிதி ஆ.தியாகராஜா அவர்களின் நூற்றாண்டு நினைவுத் தொகுப்பான “தியாகச் சுடர்” அறிமுகத் நூற் தொகுப்பு வெளியீட்டையும், சான்றோர்கள் மதிப்பளிப்பையும்,

தியாகத்திறன்வேள்வி-2016 மாணக்கர் போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான பரிசளிப்பையும் இணைத்து முப்பெரும் விழாவாக யாழ்ற்றன் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடாத்தப்பட்டது.

சுவிஸ் காரை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் அதன் மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழுவினரின் ஒழுங்கமைப்புடன் நடாத்தப்பட்டு வருகிற மாணவர்களுக்கான “தியாகத் திறன் வேள்வி” போட்டிகள் இம்முறையும் விரிவாக்கம் பெற்று “ஆளுயுர்வே ஊருயர்வு” என்ற மகுட வாசகத்துடன் கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, கர்நாடக சங்கீதப் போட்டி, பொது அறிவு – வினாடி வினாப் போட்டி, திருக்குறள் மனனப் போட்டி, முத்தமிழின் மூன்றாம் எழிலாம் நாடகத்திறன் வளர்க்கும் போட்டியும் என ஆறு வகையான போட்டிகள் மூன்று பிரிவுகளிலும் நடாத்தப்பட்டன. இப் போட்டிகளுக்கான வெற்றியாளர்களுக்குச் சான்றிதழ்களும், பெறுமதியான பரிசில்களும், சான்றோர்கள் மதிப்பளிப்பும் எதிர்வரும் 03.12.2017 ஞாயிற்றக்கிழமை பிற்பகல் 2.30மணிக்கு காரைநகர் யாழ்ற்றன் கல்லூரி பிரதான மண்டபத்தில் எமது தாய் சங்கமான காரைநகர் அபிவிருத்திச் சபையுடன் இணைந்து நடாத்தும் முத்தமிழ் விழாவில் வழங்கப்படும்.

முத்தமிழ்-2017 விழாவில் மாண்பு பெறுவோர்கள்

 திருவாளர்.கே. கார்த்திகேசு நடராஜா அவர்கள்
(முன்னாள் அதிபர் யாழ்ற்றன் கல்லூரி காரைநகர்)

 திருவாளர்.பரமநாதன் விக்கினேஸ்வரன் அவர்கள்
(முன்னாள் வடமாகண கல்விப் பணிப்பாளர், காரை
அபிவிருத்திச் சபைத் தலைவர்)

 திருவாளர். வேலுப்பிள்ளை முருகமூர்த்தி
(ஒய்வுபெறும் அதிபர் யாழ்ற்றன் கல்லூரி காரைநகர்)

 காவடிக் கலைஞர் முருகேசு மயில்வாகனம் அவர்கள்
(முன்னாள் பலநோக்கு கூட்டுறவுச் சங்கமுகாமையாளர்.)

 கலாநிதி கென்னடி விஜயரத்தினம்
(ஆங்கில இணைப் பேராசிரியர் எதியோப்பிய பல்கலைக்கழகம்)

ஊரின் கல்வி மான்களையும் கலைஞர்களையும் அறிஞர்களையும் சேவையாளர்களையும் வாழும் போது வாழ்த்தி மகிழ்விப்போம்! மகிழ்வோம்! என்பதும் அதன் மூலம் நம் இளைய சமுதாயத்தின் முன்னேற்றத்ததின் நற்திசையை கலங்கரை விளக்கமாய் நின்று காட்டுவோம் என்பதும் எமது சபையின் நோக்குகளில் ஒன்றாகும்.

“ஆளுயுர்வே ஊருயுர்வு”

“நன்றே செய்வோம். அதை இன்றே செய்வோம்”

 

இங்ஙனம்
சுவிஸ் காரை அபிவிருத்திச்சபை
செயற்குழு உறுப்பினர்கள்,
மொழி, கல்வி, கலை மேம்பாட்டுக் குழு
சுவிஸ் வாழ் காரை மக்கள்.
30.11.2017

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>