இன்தமிழுக்கு கிடைத்த இனிய பொக்கிஷம் ஈழத்துச் சிதம்பர புராணம்

Published Date

இன்தமிழுக்கு கிடைத்த இனிய பொக்கிஷம் ஈழத்துச் சிதம்பர புராணம்


புராணம் என்பது பழைமையையும் வரலாற்றையும் பேசும் நூல். மக்கள் மனதில் கதை
மூலம் இறை பக்தியை விதைப்பதில் புராணங்களின் பங்கு முக்கியமானது. காவியம்
எனப்படுவது ஐந்திலக்கணங்களுடன் அமைவது.
இவ்வகையில் காரைநகரின் புகழ் மிக்க பேராலயமான ஈழத்துச் சிதம்பரத்தின்
பேரில் அழகுறு தமிழில் காவிய மரபுகள் நிறைந்த புராணம் ஒன்று நமக்குத்
தவக்கொடையாகக் கிடைத்திருக்கிறது.

நவாலியூர் சோமசுந்தரப்புலவரின் புதல்வாரன புலவர்மணி பண்டிதர் இளமுருகனார்
இப்புராணத்தைப் படைத்தளித்திருக்கிறார். ஈழத்துச் சிதம்பர தலத்தின்
உருவாக்கம் மற்றும் அக்கோயில் திருப்பணிகள் கோயில் அர்ச்சகர் மற்றும்
அறங்காவலர் வரலாறு போன்ற பலவும் இப்புராணத்தில் நற்றமிழ் கவிகளில் பதிவு
செய்யப்பட்டிருக்கிறது.

காரைநகரின் காலத்தால் அழியாத காவியமாகப் போற்றக் கூடிய இப்புராணத்தில் பல
புதுமைகளையும் பார்க்கிறோம். ஒரு காவியத்தை எழுதுகிற கவிஞன் காவியம்
நடக்கிற இடத்தினை வைத்து நகர வருணனை , நாட்டு வருணனை, ஆற்று வருணனை
செய்வது வழக்கம். ஈழத்துச் சிதம்பர புராணத்திலும் இது
நிகழ்ந்திருக்கிறது.

ஆனால்.. யாழ்ப்பாணத்தில் ஆறே இல்லையே..? எப்படி ஆற்றுவருணனை செய்வது?
ஆனால் புலவர் தம் கவித்திறனால் ஒரு ஆற்றையே உருவாக்குகிறார். அது பல கிளை
நதிகளை உண்டாக்கிக் கொண்டு யாழ்ப்பாணம் எங்கும் ஓடி காரைநகரிலும் அது
உள்ளடங்கப்பெற்ற யாழ்ப்பாண தேசமெங்கும் பசுமைப் புரட்சி… இல்லை மாபெரும்
சிவப்புரட்சி செய்கிறதாம். அது தான் ஆறுமுகநாவலர் வழி வாழ்வாரின்
ஒழுகலாறு… இது ஒழுக்கம் என்கிற ஆறு.. சிவநெறி மறவாச் சைவர்களின்
சிந்தையில் ஊற்றெடுத்துப் பாயும் சிவானந்த நதி

இப்படியே  காரையூரின் கவின்களைப் பேசும் நகரவரணனையும் இங்கு
இடம்பெறுகிறது. இப்புராணத்தைப் படிப்பவர்கள் இப்புராணத்தில்
மிகைப்படுத்தல் குறைவு. உண்மையை கவித்துவமாக, புலவர்
எடுத்துரைத்திருக்கிறார் என்று போற்றுகிறார்கள்.

சைவசித்தாந்த செழுமையையும் ஆங்காங்கே சொல்லிச் செல்லும் ஈழத்துச்
சிதம்பரபுராணம் நிறைவு பெறுகிற போது புலவர் தன்னை முழுமையாகஇ ஈழத்துச்
சிதம்பரப் பெருமானிடம் ஒப்புவித்துப் மிக்க பக்தியில் பாடல்களைப்
பாடியிருக்கவும் காண்கிறோம்.

இளமுருகனாரின் வாழ்க்கைத் துணைவியாரான பண்டிதை பரமேஸ்வரி அம்மையாரின்
உரையுடன் இந்நூல் சில தசாப்தங்களுக்கு முன் 1975ல்
பதிப்பிக்கப்பட்டுள்ளது. புலவர் இளமுருகனாரை ஊக்குவித்துப் புராணம்
பாடச்செய்து அதைப் பதிப்பிக்கச் செய்த பெருமை இன்றைக்கும் நம்மிடையெ
வாழும் தொண்ணூற்றாறு அகவை நிறைந்த ஈழத்துச் சிதம்பரத்தைச் சேர்ந்த
கலாநிதி.க.வைத்தீஸ்வரக்குருக்களையே சாரும்.

புராணத்தின் பயன் சொல்ல வந்த புலவர்

‘திண்ணமாபுரத்தவர் தெய்வக்காதையை
எண்ணுவார் கற்பவர் காதிலேற்பவர்
மண்ணிலே செல்வமும் வாழ்வம் எய்திப்பின்
விண்ணிலே சிவபுரம் மேவி நிற்பரால்’
என்கிறார்.
சிவனாருக்கு வலப்புறம் திகழும் ஐயனார் கோயில் பற்றிச் சொல்ல
விழைந்த புலவர்,

‘செய்யசீர் சடையும் காரில் திகழ்ந்திடு வடிவும் நல்ல
கையினில் செண்டும் கொண்டு காவலே புரியும் தெய்வம்
மைதிகழ் கண்டன் ஆடல் மகிழ்ந்துழி எழுந்து மூர்த்தி
ஐயனார் கோயில் ஆங்கே அழகுற மிளிருமன்றே’
என்று பாடுகிறார்.

போர்த்துக்கேய மதவெறியர்களின் சூழ்ச்சிகளையும் அக்காலத்தில் ஈழத்தில்
நடந்த அவலங்களையும் இப்புராணத்தில் பதிவிடக் காண்கிறோம்.

பறங்கியர் வந்த நாளிற் சிவநெறி பட்டபாடும்
அறங்களைச் சிதைத்த வாறும் அந்தணர் அடைந்த துன்பும்
மறங்கெழு தமிழ மன்னன் மற்றவர்க் கெடுத்த போரும்
நிறங்கெழு குரவர் ஞான முழுக்குரை நேர்ந்த வாறும்

சைவர்கள் விரத நாளிற் றம்முடைய சீல மெல்லாம்
பொய்யர்க ளறியா வண்ணம் மறைவினிற் புரிந்தவாறும்
செய்யநற்குழந்தை கட்குச் சீரிலாப் பெயர்கள் சூட்டிப்
பையவே யவரைத் தங்கள் பாழ்நெறிப் படுத்த வாறும்”

உண்டிக ளுடைகள் மேலாம் உத்தியோ கங்கள் நல்கிக்
கொண்டதஞ் சமயம் மாற்றக் கொள்கையிற் றோற்ற வாறும்
திண்டிறற் சைவ வீரர் அவர்க்கிடர் செய்த வாறும்
கண்தலம் நீர ரும்பக் காதையிற் கனியச் சொல்வார்

இவ்வாறாகப் பல விடயங்களையும் சொல்லிச் செல்கிறது இந்த அரிய பொக்கிஷமான
ஈழத்துச் சிதம்பர புராணம்.

தமிழுக்கும் சைவத்தின் வளமைக்கும் உரிய உயர் நகராக விளங்குகிற காரைநகரின்
பெருமையை உள்ளங்கை நெல்லிக்கனி போலக் காட்டுகிற இந்த ஈழத்துச் சிதம்பர
புராணம் மற்றும் திக்கரைத் திரிபந்தாதி, தன்னை யமக அந்தாதி போன்றவற்றின்
பெருமை இன்றைய இளஞ்சந்ததியினரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தி.மயூரகிரி சர்மா

ஈழத்துச் சிதம்பரத்தில் திருக்குடமுழுக்குப் பெருவிழா

Published Date

ஈழத்துச் சிதம்பரத்தில் திருக்குடமுழுக்குப் பெருவிழா

ஈழத்தில் சிதம்பர தரிசனம்

தமிழகத்தில் அமைந்திருக்கிற திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்திற்குச்
சென்று ஆடவல்லபெருமானைத் தரிசிக்க இயலாதவர்களுக்கு அந்த காட்சியை
இலங்கையிலேயே காண வழி செய்யும் பூமி காரைநகர்.


காரைநகரார் இல்லாத இடமில்லை என்று சொல்லுவார்கள். (காக்கை செல்லாத இடமும்
காரைநகரார் இல்லாத இடமும் இல்லை) அவ்வளவுக்கு கல்வியிலும் வாணிபத்திலும்
சிறந்து விளங்குகிறவர்கள் இவர்கள்.
இப்படி வளர்ச்சி பெற்றிருக்கிற காரைப்பெருநகரார் தங்களின் உயர்விற்கு
முக்கிய காரணராக விளங்கும் கண்மூன்றுடைய கடவுள் மீது மிக்க
காதலுடையவர்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆண்டி கட்டிய கோயில்

இராமேஸ்வரத்திலிருந்து வந்த ஆண்டி என்கிற அன்பரும் களபூமியைச் சேர்ந்த
அம்பலவி முருகரும் இணைந்ததன் விளைவாக, அவர்கள் மனதில் உண்டான
சிவசிந்தையின் பயனாக, இன்றைய காரைநகர் சிவன் கோயில் எழுந்திருக்கிறது.
ஆண்டி கட்டிய கோயில் இன்று பேரரசர்கள் கட்டிய கோயில் போலப்
பரிணமித்திருக்கிறது. இதற்கு காரணம் இங்கே ஆடுகிற ஆடலரசர் தான்.
மூலஸ்தானத்தில் சௌந்தராம்பிகை உடனாய சுந்தரேஸ்வரர் என்கிற பெயருடன்
இறைவனும் இறைவியும் எழுந்தருளியிருப்பினும் ‘ஈழத்துச் சிதம்பரத்தில்’
நடராஜப்பெருமானுக்கு தனிப்பெருஞ்சிறப்பிருக்கிறது.

ஆடும் கடவுள்

ஈழத்துச்சிதம்பரத்தில் அடுகிற ஆடவல்லாருக்கு இரு புறமும் பதஞ்சலி
வியாக்ரபாதர் என்கிற இரண்டு முனிவர்களையும் காணலாம். சுவாமியைச் சுற்றிச்
சுழல்கிற 51 சுடர் கொண்ட திருவாசியும் இவ்வடிவத்திற்கு அழகு கூட்டுகிறது.
இப்பெருமானின் அழகில் திருவாவடுதுறையாதீன மஹாசந்நிதானம் போன்றவர்கள்
ஈடுபட்டு வியந்து போற்றியிருக்கிறார்கள்

திண்ணபுரம் என்ற பெயர்

கோயில் இருக்கிற இடத்தை திண்ணபுரம் என்றும் சொல்கிறார்கள். தினகரன் என்ற
அந்தணர் அங்கு வாழ்ந்ததாலும் அங்கே குடிலமைத்துக் கொண்டு தன்
வீட்டுத்திண்ணையில் பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்ததாலுமே
இப்பெயர் ஏற்பட்டதாம். எது எப்படியோ திண்ணபுரம் சென்று தில்லை அம்பலவனை
தரிசித்தால் திருவருள் கிட்டுவது திண்ணம்.

ஐயனின் வலப்புறம் ஐயனார்

சிவபெருமானுக்கு வலப்புறத்தில் ஐயனாருக்கு கோயில் இருக்கிறது. இவர் தான்
சிவனுக்கும் முன் வந்து இவ்விடத்தில் சிவனார் வருவதற்கும் கால்கோளாய்
இருந்தவர். மூலாலயத்தில் ஒரே கல்லில் பூர்ண புஷ்கலா தேவியருடன்
ஹரிஹரஸ_தராக இக்கடவுள் விளங்கக் காணலாம்.

கடற்பேரலையை வென்ற பஞ்சரத பவனி

கடற்பேரலை வந்த அன்று மார்கழிப் பெருவிழாவில் கடல் நடுவிருக்கும்
காரைநகரில் கடலோரம் அண்டியுள்ள இந்த கோயிலில் பஞ்சரதபவனி நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. கடற்பேரலை என்ன செய்ய முடியும்..? கடற்பேரலை தான்
தோல்வியுற்றதன்றி ஐந்து தேர்களின் வலமும் சிறப்பாகவே நடைபெற்றது. இவ்வாறு
அற்புதம் நிறைந்த ஆலயம் இது.
இவ்வாறெல்லாம் சிறப்புப் பொருந்திய காரைநகர் ‘ஈழத்துச் சிதம்பரம்’ சிவன்
கோயிலின் மகாகும்பாபிஷேகம் எதிர்வரும் 06.06.2011 திங்கட்கிழமை
மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

மஹாயாக மஹாகும்பாபிஷேகம்

சிவபெருமானின் பெருங்கருணையை வேண்டி 33 குண்டங்களில் அக்னி வழிபாட்டுடன்
அதி உத்தம பட்சமாக கலாநிதி. க.வைத்தீஸ்வரக்குருக்களின் ஆசியுடன்
சிவஸ்ரீ.க.ச. சோமாஸ்கந்தக் குருக்கள் தலைமையில் இக்குடமுழுக்கு விழா
நடைபெறுகிறது.

எதிர்வரும் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை விநாயகர் வழிபாட்டுடன்
ஆரம்பமாகியுள்ள இக்கிரியைகளின் முக்கிய நிகழ்வுகள் 01.06.2011 இன்று
புதன்கிழமை யாகாராம்பத்துடன் ஆரம்பமாகியிருக்கிறது.

04ம் 05ம் திகதி சனி மற்றும் ஞாயிறு இருதினங்களிலும் அடியவர்கள்
எண்ணைக்காப்புச் சாற்றி வழிபட ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. 06ம் திகதி
திங்கட்கிழமை அதிகாலை 6.30 மணியளவில் மகாகும்பாபிஷேகம் நடைபெறும்.

இவ்வைபவத்தை முன்னிட்டு சிதம்பரம், திருச்செந்தூர் ஆகிய தலங்களிலிருந்து
தீட்சிதர்களும் சிவாச்சார்யார்களும் வந்து கலந்து கொண்டுள்ளமையும்
குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வை முன்னிட்டு காரைநகர் விழாக்கோலம்
பூண்டிருக்கிறது.

ஆன்மீக மலர்ச்சிக்கு உதவட்டும்

இவ்விழாக்களின் விளைவாக, உண்மையான ஆன்மீக எழுச்சி உருவாக வேண்டும் என்று
பிரார்த்திப்போம். யான் சிதம்பரம் (தமிழகம்) சென்ற போது ஆங்கே நம்மவர்கள்
(யாழ்ப்பாணத்தவர்கள்) செய்த புண்ணிய கைங்கர்யங்கள் இன்றும் ஆறுமுகநாவலர்
சைவப்பிரகாச வித்தியாசாலையாயும், ஞானப்பிரகாசர் திருக்குளமாயும்,
சைவபரிபாலன சபையாயும், சேக்கிழார் கோயிலாயும் சிறப்புற்றிருப்பதைக் கண்டு
மகிழ்ந்தேன்.

இவ்வாறெல்லாம் கடல் கடந்து சென்று சிதம்பரத்திலும் சைவத்தமிழ்ப்பணி செய்த
நம் முன்னோர் வழியில் நாமும் இறைபணியாற்ற ஈழத்து சிதம்பர பேரருளாளன்
திருவருள் பொழிய வேண்டுவோம்.

தி.மயூரகிரி சர்மா

 
 
 
 
Copyright 2011 கட்டுரைகள். Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.