ஈழத்துச் சிதம்பரத்தில் திருக்குடமுழுக்குப் பெருவிழா

Published Date

ஈழத்துச் சிதம்பரத்தில் திருக்குடமுழுக்குப் பெருவிழா

ஈழத்தில் சிதம்பர தரிசனம்

தமிழகத்தில் அமைந்திருக்கிற திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்திற்குச்
சென்று ஆடவல்லபெருமானைத் தரிசிக்க இயலாதவர்களுக்கு அந்த காட்சியை
இலங்கையிலேயே காண வழி செய்யும் பூமி காரைநகர்.


காரைநகரார் இல்லாத இடமில்லை என்று சொல்லுவார்கள். (காக்கை செல்லாத இடமும்
காரைநகரார் இல்லாத இடமும் இல்லை) அவ்வளவுக்கு கல்வியிலும் வாணிபத்திலும்
சிறந்து விளங்குகிறவர்கள் இவர்கள்.
இப்படி வளர்ச்சி பெற்றிருக்கிற காரைப்பெருநகரார் தங்களின் உயர்விற்கு
முக்கிய காரணராக விளங்கும் கண்மூன்றுடைய கடவுள் மீது மிக்க
காதலுடையவர்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆண்டி கட்டிய கோயில்

இராமேஸ்வரத்திலிருந்து வந்த ஆண்டி என்கிற அன்பரும் களபூமியைச் சேர்ந்த
அம்பலவி முருகரும் இணைந்ததன் விளைவாக, அவர்கள் மனதில் உண்டான
சிவசிந்தையின் பயனாக, இன்றைய காரைநகர் சிவன் கோயில் எழுந்திருக்கிறது.
ஆண்டி கட்டிய கோயில் இன்று பேரரசர்கள் கட்டிய கோயில் போலப்
பரிணமித்திருக்கிறது. இதற்கு காரணம் இங்கே ஆடுகிற ஆடலரசர் தான்.
மூலஸ்தானத்தில் சௌந்தராம்பிகை உடனாய சுந்தரேஸ்வரர் என்கிற பெயருடன்
இறைவனும் இறைவியும் எழுந்தருளியிருப்பினும் ‘ஈழத்துச் சிதம்பரத்தில்’
நடராஜப்பெருமானுக்கு தனிப்பெருஞ்சிறப்பிருக்கிறது.

ஆடும் கடவுள்

ஈழத்துச்சிதம்பரத்தில் அடுகிற ஆடவல்லாருக்கு இரு புறமும் பதஞ்சலி
வியாக்ரபாதர் என்கிற இரண்டு முனிவர்களையும் காணலாம். சுவாமியைச் சுற்றிச்
சுழல்கிற 51 சுடர் கொண்ட திருவாசியும் இவ்வடிவத்திற்கு அழகு கூட்டுகிறது.
இப்பெருமானின் அழகில் திருவாவடுதுறையாதீன மஹாசந்நிதானம் போன்றவர்கள்
ஈடுபட்டு வியந்து போற்றியிருக்கிறார்கள்

திண்ணபுரம் என்ற பெயர்

கோயில் இருக்கிற இடத்தை திண்ணபுரம் என்றும் சொல்கிறார்கள். தினகரன் என்ற
அந்தணர் அங்கு வாழ்ந்ததாலும் அங்கே குடிலமைத்துக் கொண்டு தன்
வீட்டுத்திண்ணையில் பிள்ளைகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்ததாலுமே
இப்பெயர் ஏற்பட்டதாம். எது எப்படியோ திண்ணபுரம் சென்று தில்லை அம்பலவனை
தரிசித்தால் திருவருள் கிட்டுவது திண்ணம்.

ஐயனின் வலப்புறம் ஐயனார்

சிவபெருமானுக்கு வலப்புறத்தில் ஐயனாருக்கு கோயில் இருக்கிறது. இவர் தான்
சிவனுக்கும் முன் வந்து இவ்விடத்தில் சிவனார் வருவதற்கும் கால்கோளாய்
இருந்தவர். மூலாலயத்தில் ஒரே கல்லில் பூர்ண புஷ்கலா தேவியருடன்
ஹரிஹரஸ_தராக இக்கடவுள் விளங்கக் காணலாம்.

கடற்பேரலையை வென்ற பஞ்சரத பவனி

கடற்பேரலை வந்த அன்று மார்கழிப் பெருவிழாவில் கடல் நடுவிருக்கும்
காரைநகரில் கடலோரம் அண்டியுள்ள இந்த கோயிலில் பஞ்சரதபவனி நடைபெற்றுக்
கொண்டிருக்கிறது. கடற்பேரலை என்ன செய்ய முடியும்..? கடற்பேரலை தான்
தோல்வியுற்றதன்றி ஐந்து தேர்களின் வலமும் சிறப்பாகவே நடைபெற்றது. இவ்வாறு
அற்புதம் நிறைந்த ஆலயம் இது.
இவ்வாறெல்லாம் சிறப்புப் பொருந்திய காரைநகர் ‘ஈழத்துச் சிதம்பரம்’ சிவன்
கோயிலின் மகாகும்பாபிஷேகம் எதிர்வரும் 06.06.2011 திங்கட்கிழமை
மிகச்சிறப்பாக நடைபெறவுள்ளது.

மஹாயாக மஹாகும்பாபிஷேகம்

சிவபெருமானின் பெருங்கருணையை வேண்டி 33 குண்டங்களில் அக்னி வழிபாட்டுடன்
அதி உத்தம பட்சமாக கலாநிதி. க.வைத்தீஸ்வரக்குருக்களின் ஆசியுடன்
சிவஸ்ரீ.க.ச. சோமாஸ்கந்தக் குருக்கள் தலைமையில் இக்குடமுழுக்கு விழா
நடைபெறுகிறது.

எதிர்வரும் 29ம் திகதி ஞாயிற்றுக்கிழமை விநாயகர் வழிபாட்டுடன்
ஆரம்பமாகியுள்ள இக்கிரியைகளின் முக்கிய நிகழ்வுகள் 01.06.2011 இன்று
புதன்கிழமை யாகாராம்பத்துடன் ஆரம்பமாகியிருக்கிறது.

04ம் 05ம் திகதி சனி மற்றும் ஞாயிறு இருதினங்களிலும் அடியவர்கள்
எண்ணைக்காப்புச் சாற்றி வழிபட ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது. 06ம் திகதி
திங்கட்கிழமை அதிகாலை 6.30 மணியளவில் மகாகும்பாபிஷேகம் நடைபெறும்.

இவ்வைபவத்தை முன்னிட்டு சிதம்பரம், திருச்செந்தூர் ஆகிய தலங்களிலிருந்து
தீட்சிதர்களும் சிவாச்சார்யார்களும் வந்து கலந்து கொண்டுள்ளமையும்
குறிப்பிடத்தக்கதாகும். இந்நிகழ்வை முன்னிட்டு காரைநகர் விழாக்கோலம்
பூண்டிருக்கிறது.

ஆன்மீக மலர்ச்சிக்கு உதவட்டும்

இவ்விழாக்களின் விளைவாக, உண்மையான ஆன்மீக எழுச்சி உருவாக வேண்டும் என்று
பிரார்த்திப்போம். யான் சிதம்பரம் (தமிழகம்) சென்ற போது ஆங்கே நம்மவர்கள்
(யாழ்ப்பாணத்தவர்கள்) செய்த புண்ணிய கைங்கர்யங்கள் இன்றும் ஆறுமுகநாவலர்
சைவப்பிரகாச வித்தியாசாலையாயும், ஞானப்பிரகாசர் திருக்குளமாயும்,
சைவபரிபாலன சபையாயும், சேக்கிழார் கோயிலாயும் சிறப்புற்றிருப்பதைக் கண்டு
மகிழ்ந்தேன்.

இவ்வாறெல்லாம் கடல் கடந்து சென்று சிதம்பரத்திலும் சைவத்தமிழ்ப்பணி செய்த
நம் முன்னோர் வழியில் நாமும் இறைபணியாற்ற ஈழத்து சிதம்பர பேரருளாளன்
திருவருள் பொழிய வேண்டுவோம்.

தி.மயூரகிரி சர்மா

 
 
 
 
Copyright 2011 ஈழத்துச் சிதம்பரத்தில் திருக்குடமுழுக்குப் பெருவிழா. Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.