காரைநகரும் விளையாட்டுத் துறையும்

Published Date

 

 இளைஞர்களின் சிந்தனை செயல்கள், வழி தவறி செல்லாமல் மாலை வேளைகளில் பயன்தரு செயல்களில் ஈடுபட விளையாட்டு வழி அமைக்கின்றது.

 விளையாட்டில் ஈடுபடுவோர் உடல் வலிமை பெறல் மாத்திரமன்றி சகவீரர்களுடன் சேர்ந்து இயங்கி தன் அணியின் வெற்றிக்கு உழைக்கும் மனப்பான்மை, மதிநுட்பத்துடன் செயற்படல், மனக்கலக்கம் இன்றி செயலை எதிர் கொள்ளல், கலக்கமற்ற வீரம் போன்ற நற்பண்புகளை உருவாக்கும் களமாக விளையாட்டு மைதானங்கள் திகழ்கின்றன.

 நமது இளைஞர்கள் மாலை வேளைகளில் கலாநிதி. ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம், யாழ்ரன் கல்லூரி, சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயம், வியாவில் சைவ வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் விளையாட்டு மைதானங்களில் தரவை, சிதம்பரா மூர்த்தி கேணியடி, மருதடி வீரகத்தி விநாயகர் ஆலய வீதி, சடையாளி, நீலிப்பந்தனை சனசமூக நிலையம், கேசடை வீதியில் உள்ள வயல்வெளி, வாரிவளவு கற்பக விநாயகர்வீதி, கோவளம் விளையாட்டு மைதானம், சிவகாமி அம்மன் கோவிலடி, வியாவில் சனசமூக நிலையம், தோப்புக்காடு போன்ற இடங்களில் விளையாட்டில் ஈடுபடுவர்.

  யாழ்ப்பாண மாவட்டத்தில் விளையாட்டில் உயர் அந்தஸ்தை பெற்று இருந்த ஆசிரியர் அப்பாக்குட்டி சுந்தரம்பிள்ளை (சிவன் கோவிலடி) அவர்களை தலைவராகக் கொண்டு தரவை யூனியன் THARAVAI  UNION என்ற பெயரில் உதைபந்தாட்டக் குழு ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாண காவல்துறை நீலன் காட்டில் முகாம் அமைத்திருந்த கடற்படையினர். ஆர்வமுள்ள ஏனைய பாடசாலைகளின் அணிகளும் உதைபந்தாட்டப் போட்டிகளில் பங்கு பற்ற வரவேற்கப்பட்டனர். துடுப்பாட்டக் குழு அமைக்கப்பட்டாலும் ஆர்வத்துடன் போட்டிகளில் பங்குபற்றவில்லை. இதனைத் தொடர்ந்து அ. சுந்தரம்பிள்ளை அவர்களின் தலைமையில் 1920களில் காரை விளையாட்டுக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. கெப்டன் தர்மரத்தினம் அவருடைய சகோதரர் கனகரத்தினம் (புது றோட்டு) ஆகியோர் இப்பணியில் இணைந்து பணியாற்றினர். காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம், மலாய் நாட்டில் சேவையாற்றி ஓய்வூதியம் பெற்று காரை நகரில் வாழ்ந்தவர்கள், காரைவாழ் வர்த்தகப் பெருமக்கள் கழகத்திற்கு பொருளுதவி வழங்கினர்.

 இக்காலப்பகுதிகளில் தரவை மைதானம் விளையாட்டு நிகழ்வுகளுக்காக பயன்படுத்தப்பட்டது. காரைநகரின் சகல குறிச்சி இளைஞர்களும் மாலை வேளைகளில் இங்கு வந்து சேருவர். சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில் யாழ் மாவட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களும் இங்கு வந்து சேருவர். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கல்லூரிகள், கழகங்களுடன் காரை விளையாட்டுக் கழகம் உதைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றியது. 1933இல் சென்பற்றிக்ஸ் (St.Patrick’s  League)  கழகத்தினரால் நடாத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டிகளில் கழகம் பங்கு கொண்டது. யாழ் மாவட்ட உதைபந்தாட்ட தெரிவு அணியில் காரை விளையாட்டு கழக வீரர்கள் இடம் பெற்றனர். 

 யாழ் மாவட்ட பிரபல பாடசாலைகளின் உதைபந்தாட்ட அணியில் காரைநகர் வீரர்கள் முன்னணியில் இருந்தனர். 1933 – 1945ம் ஆண்டு காலப்பகுதியில் காரை விளையாட்டுக் கழகம் யாழ்ப்பாண உதை பந்தாட்டத்தில் செல்வாக்கு பெற்றிருந்தது.

 ஒரு காலகட்டத்தில் அமரர்கள் செல்வரத்தினம் (மாப்பாணவூரி) தர்மரத்தினம், கனகரத்தினம், (புது றோட்டு) சீவரத்தினம் (கோவளம்) நவரத்தினம் (மல்லிகை) காரை விளையாட்டுக் கழக உதை பந்தாட்ட அணியில் விளையாடியமையால் ~~இரத்தினங்கள் அணி|| எனவும் அழைக்கப்பட்டது. அமரர் F.X.C.  நடராஜா ஆகியோர் Fullback நிலையில் விளையாடினார்.

 அமரர் சண்முகம் சுந்தரசிவம் (மருதடி) யாழப்பாணஐக்கிய விளையாட்டுக் கழகத்தின் துடுப்பாட்ட வீரர் திரு. ஆறுமுகம் இரத்தினகோபால் (புது றோட்டு) 1954இல் சென்னை அணியுடன் போட்டியிட்ட யாழ் மாவட்ட அணித் தலைவர், யாழ்ப்பாண விக்டோரியன் கழகத்தின் அணித் தலைவர் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் பயிற்றுனராக பத்து ஆண்டுகள் பணியாற்றி கல்லூரிக்கு பல வெற்றிகளை தேடிக் கொடுத்தவர். காரை இந்துக் கல்லூரி, காரை விளையாட்டுக் கழகம், சோலையான் விளையாட்டுக் கழகம், கோவளம் விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் பயிற்றுவிப்பாளர். யாழ்ப்பாண மாவட்டத்தில் உதைபந்தாட்டத்தில் சிறப்பான இடத்தை வகித்தவர். திரு.A.K.நடராஜா (மாப்பாணவூரி) விக்டோரியின் அணியில் இடம் பெற்று Ceylon  Football   Assoccation  நடாத்திய போட்டிகளில் பங்குபற்றியவர். அமரர் செல்லப்பா சுப்பிரமணியம் (மருதடி) காரை விளையாட்டுக் கழகத்தின் சிறந்த முன்னணி வீரர். நொத்தாரிசு க.மு.தர்மராஜா சிறந்த கோல் காப்பாளர். அமரர் ஆ.குமாரசாமி உதைபந்தாட்ட போட்டிகள் ஓட்டப் போட்டிகளில் கல்லூரிக் காலங்களில் பங்குபற்றியவர். சென்னை Y.M.C.A  கல்லூரியில் உடற்கல்விப் பயிற்சிநெறி பயிலும் போது Y.M.C.A அணியின் உதைபந்தாட்ட வீரர் காரைநகர் இந்துக் கல்லூரி விளையாட்டுத் துறை ஆசிரியராக கடமை ஆற்றியவர்.

 1960களில் மலேசியாவில் இருந்து வருகை தந்த திரு. நல்லையா பொன்னையா         (மாப்பாணவூரி) காரை விளையாட்டுக் கழகத்தை மீண்டும் இயக்கினார். கழகத்தின் செயற்பாடுகளுக்கு பொருளுதவி வழங்கி பலம் மிக்க உதைபந்தாட்ட அணியை உருவாக்கினார். கழகத்தின் உதைபந்தாட்ட அணித்தலைவராக இருந்து கழகத்தின் வெற்றிக்கு காரணமாயிருந்தார்.

 1970களில் திரு. நவரத்தினம் தருமராஜா (மல்லிகை) பொருளுதவி வழங்கினார். திரு. தர்மராஜா உதைபந்தாட்ட, கரப்பந்து, துடுப்பாட்ட அணிகளுக்கு தலைமை தாங்கினார். இக்காலகட்டத்தில் கழகம் நெடுங்கேணி பிரிவுக்கு விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்காக சுற்றுலாவை மேற்கொண்டது.

 1979ஆம் ஆண்டு காரை விளையாட்டுக் கழகம் நிறுவனமயப்படுத்தப்பட்டது. கழகத்திற்கு நிருவாகம், வங்கிக் கணக்கு, இலச்சனை, கொடி, யேர்சி (JERSEY) என்பன உருவாக்கப்பட்டன. 20.10.1979இல் காரை விளையாட்டுக் கழகத்திற்கு தேவையான நிதியை உருவாக்குவதற்காக தீபாவளிச் சிறப்பிதழ் ஒன்று கலை நிகழ்வுகளுடனும் நடராஜா ஞாபகார்த்த மண்டபத்தில் பிரதம அதிதி சட்டத்தரணி ந. சிறிகாந்தா அவர்களினால் வெளியிடப்பட்டு வைக்கப்பட்டது. கழகத்தின் போஷகர்களாக காரை இந்துக் கல்லூரி, யாழ்ரன் கல்லூரி உடற்கல்வி ஆசிரியர்கள் திரு. அ. சோமஸ்கந்தன், திரு. அ. தியாகராஜா, வேதர் அடைப்பைச் சேர்ந்த கொழும்பு பிரபல வர்த்தகர் திரு. செ. பரம்சோதி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இச்சிறப்பிதழ் வெளியிடுவதற்கான விளம்பரங்களை கழகத்தின் போஷகர் திரு. செ. பரம்சோதி பெற்றுத் தந்தமை குறிப்பிடத்தக்கது.

 1970இன் பிற்பகுதிகளில் காரை விளையாட்டுக் கழகத்தின் மீள் எழுச்சியும், செயற்பாடுகளும் காரைநகரில் பல விளையாட்டுக் கழகங்களின் தோற்றத்திற்கும், விளையாட்டு நிகழ்வுகள் சுறுசுறுப்பு அடையவும், காரணமாயிற்று இக்காலகட்டத்தில் காரைநகர் கழகங்களுக்கிடையே உதைபந்தாட்ட, கரப்பந்து, துடுப்பாட்ட போட்டிகள் ஆரோக்கியமான சூழலில் நடைபெற்றது. களபூமி சனசமூக நிலைய இளைஞர்கள் காரை விளையாட்டுக் கழகத்துடன் இணைந்து செயற்பட்டமை காரை விளையாட்டுக் கழகம் பல வெற்றிகளை பெறவும் ஸ்திரமான செயற்பாட்டிற்கும் உறுதுணையாயிற்று.

1980களில் காரைநகருக்கு ஒரு பொது விளையாட்டு மைதானம் அமைப்பதற்காக காரை விளையாட்டுக் கழகம் வலந்தலைச் சந்தியில் (தற்போது உதவி அரசாங்க அதிபர் பணிமனை, விவசாய விரிவாக்க பணிமனை, தொழிற்பயிற்சி நிலையம் உள்ள வளாகம்) தென் இந்தியா சிதம்பர தேவஸ்தானத்திற்கு உரித்தான காணியில் உள்ள ஒரு பகுதியை 99 ஆண்டுகளுக்கு தம்பிரான் சுவாமிகளிடம் குத்தகைக்கு பெற்று மைதானம் அமைக்க எடுத்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

 காரை விளையாட்டுக் கழகம், ஊர்காவற்துறை, அராலி, யாழ்ப்பாணம் பண்டதரிப்பு ஆகிய இடங்களில் நடாத்தப் பெற்ற சுற்றுப் போட்டிகளில் பங்குபற்றியது. அதே வேளை சிநேக பூர்வ போட்டிகளிலும் பங்கு பற்றியது ஊர்காவற்றுறை உதவி அரசாங்க பிரிவில் விளையாட்டு அமைச்சின் ஆதரவுடன் நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளிலும் ~பாலா பிறதர்ஸ்| தீவுப் பகுதி கழகங்களுக்கிடையில் நடாத்திய போட்டிகளிலும் பங்குபற்றியது. ~பாலா பிறதர்ஸ்| ஸ்தாபனத்தால் நடாத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் போட்டியில் வெற்றியீட்டி ~சீவலி டயறி| வெற்றிக் கேடயத்தை சுவீகரித்துக் கொண்டது.
 வாரிவளவு நல்லியக்க சபையினரால் ஒழுங்கு செய்யப்பட்ட 14 விளையாட்டு நிகழ்வுகளில் 13 வெற்றிக் கேடயங்களையும் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியில் காரை விளையாட்டுக் கழக A, B   அணிகள் பங்குபற்றி 1ம், 2ம் இடங்களையும் பெற்றது. தீபாவளி தினத்தன்று காரைநகர் கடற்படையும் காரை விளையாட்டுக் கழகமும் பங்குபற்றும் உதைபந்தாட்ட போட்டி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யம் பெற்றது.
 காரைநகரில் இயங்கும் விளையாட்டுக் கழகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட வீரர்களை கொண்ட அணி இக்காலத்தில் காரைநகருக்கு வெளியே நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றியமை சிறப்பம்சமாகும்.
 1991ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது காரை விளையாட்டுக் கழகம் அனைத்து உடமைகளையும் இழந்தமையும், அங்கத்தவர்கள் பல்வேறு இடங்களிலும் வாழ்கின்றமையும் காரை விளையாட்டுக்கழகத்தை செயற்படாநிலைக்கு தள்ளியது. கலாநிதி. ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலய விளையாட்டுப் போட்டிக்கு காரை விளையாட்டுக் கழகத்தால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக அமரர்களான விளையாட்டு வீரர்கள்; விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் ஞாபகார்த்தமாக காரை விளையாட்டு கழக அங்கத்தவர்கள் அமரர்களான வீரர்கள் ஆர்வலர்களின் உறவினர்களால் 87இ000ஃஸ்ரீ பெறுமதியான சுழல் வெற்றிக் கேடயங்கள் பதினெட்டும் வீரர்களுக்கான இருபத்து மூன்று வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டது. அன்னார்களின் பங்களிப்பு தொடர்பான துண்டுப் பிரசுரமும் வழங்கப்பட்டது. கலாநிதி. ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலய உதைபந்தாட்ட அணிகளுக்கான (Jersey ) 65,000/= பெறுமதியான யேர்சி வழங்கப்பட்டது. காரை விளையாட்டுக் கழகத்தை இயக்குவதற்கான சிந்தனைகள் செயற்றிட்டங்கள் இருப்பினும் இயக்குவதில் சிரமங்கள் தென்படுகின்றன. காரைநகர் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கான முன்மொழிவுகள் காரை விளையாட்டுக் கழகத்திடம் இருப்பதால் எதிர்காலத்தில் பணிகள் ஆரம்பிக்கும் சாத்தியம் உண்டு.

 1930 - 1937ஆம் ஆண்டு வரைக்கும் சித்திரை பாடசாலை விடுமுறை காலத்தில் அகில காரைநகர் மெய்வல்லுனர் போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் காரைநகரின் சகல பகுதிகளிலும் வாழ்ந்த மக்களும் உயர்கல்விக்காக யாழ்நகரின் பிரபல பாடசாலைகளில் கல்வி கற்ற காரைவாழ் மாணவர்களும் மிக்க ஆர்வத்துடன் பங்குபற்றினர். இப்போட்டிகளை நடாத்துவதில் பெரும் பங்காற்றியவர் நடுத்தெருவைச் சேர்ந்த அமரர் திரு. நா. பொன்னம்பலம் காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தை உருவாக்கியவர். இவருடன் சேர்ந்து உழைத்தவர் மொறக்கோ சுப்பிரமணியம் எனப் போற்றப்பட்டு வந்த களபூமி K.K.சுப்பிரமணியம் அப்புக்காத்தர் திரு. நா. பொன்னம்பலம் காரை இந்துக் கல்லூரியின் பழைய மாணவர் சங்கத்தின் முதற் செயலாளர். அரச சேவையில் எழுதுவினைஞராக சேர்ந்து கணக்காளராகக் பதவி உயர்வு பெற்றவர்.

தோப்புக்காடு விளையாட்டுக் கழகம்

 தோப்புக்காடு கிராமத்தில் பல குழுக்களாக விளையாட்டில் ஈடுபட்டு இருந்த இளைஞர்கள் தமது கிராமத்து விளையாட்டு நிகழ்வுகளை முன்னெடுத்துச் செல்வதற்காக 30.11.1979இல் தோப்புக்காடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தை ஆரம்பித்தனர். நாளடைவில் ஆர்வலர்கள் சமூகப் பிரதிநிதிகள், பெண்களை கழகத்தில் இணைத்துக் கொள்வதற்காக தோப்புக்காடு விளையாட்டுக் கழகம் என மாற்றமடைந்தது. ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் நடாத்தப் பெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி வெற்றியீட்டியது. இப்பிரிவில் எல்லே விளையாட்டு நிகழ்விற்கான வெற்றிக் கேடயத்தை தொடர்ந்து பல ஆண்டுகளாக தோப்புக்காடு விளையாட்டுக் கழகம் தனதாக்கிக் கொண்டது.  இக்காலப்பகுதியில் காரைநகரில் இயங்கிய விளையாட்டுக் கழகங்கள், கடற்படை அணி, இலங்கை போக்குவரத்துச் சபை அணிகளுடன் உதைபந்தாட்டப் போட்டியில் கலந்து கொண்டது. காரைநகர் தெரிவு அணியிலும் தோப்புக்காடு விளையாட்டுக் கழக வீரர் இடம் பெற்றனர்.

 1985ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து இப்பிரதேச மக்கள் வட்டுக்கோட்டையில் வாழ்ந்து கொண்டு இருக்கும் பொழுது வலிகாமம் மேற்குப் பிரிவில் நடைபெற்ற உதைபந்தாட்ட போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிக் கேடயங்களைப் பெற்றுக் கொண்டனர். மேலும் யாழ் மாவட்ட முன்னணி விளையாட்டுக் கழகங்கள் திருமலை நட்சத்திர விளையாட்டுக் கழகம் ஆகியவற்றுடன்; உதைபந்தாட்ட போட்டியில் பங்குபற்றினர்.

 தோப்புக்காடு கிராமத்தினர் மீளக்குடியமர்ந்த பின்னர் காரைநகர் உதவி அரசாங்க பிரிவினால் நடாத்தப் பெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றி பரிசில்களை பெற்றுள்ளனர். இக்கிராம மக்கள் உறுதியான வாழ்வாதாரமின்றி தம் வாழ்க்கையை நடாத்திக் கொண்டு இருக்கிறார்கள். தோப்புக்காடு விளையாட்டுக் கழகம் ஊக்குவிக்கப்டுமிடத்து தரமான வீரர்களை உருவாக்கும்.
 
சோலையான் விளையாட்டுக் கழகம்
 வேதர் அடைப்பு, வடகாடு, அல்லின் வீதி போன்ற குறிச்சிகளில் வசித்த விளையாட்டில் ஆர்வமுள்ள இளைஞர்களை ஊக்குவித்து விளையாட்டுத் துறையில் ஈடுபடுத்தும் நோக்குடன் 1981ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் நாள் திரு. K.C. கந்தசாமி (இ.போ.ச காரைநகர் சாலை முகாமையாளர்) எடுத்துக் கொண்ட பயனுறு முயற்சியால் உருவாக்கப்பட்டது. கழகத்தை உருவாக்குவதிலும், வளர்ச்சியிலும், பயிற்சி வழங்குவதிலும் விளையாட்டு வீரர் அமரர் ஆ. இரத்தினகோபால் பேராசிரியர் வே. இராமகிருஸ்ணன், அமரர் திரு. ஆ. கனகசபை, திரு. த. துரைசாமி (ஆசிரியர்) ஆகியோர் பங்குபற்றினர். சோலையான் விளையாட்டுக் கழகம் இயங்கிய பிரதேச மக்கள் உணர்வுபூர்வமாக வழங்கிய ஒத்துழைப்பு கழகம் மிகக் குறுகிய காலத்தில் மிகப் பெரிய வெற்றிகளை அடையக் காரணமாயிற்று. 1981ம் ஆண்டு மார்ச் மாதம் உதவி அரசாங்க அதிபர் பிரிவில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டியில் கழகம் 1ஆம் இடத்தை ஆண்கள் பெண்கள் பிரிவில் பெற்று வெற்றிக் கேடயத்தை பெற்றுக் கொண்டது. தொடர்ந்து மூன்று ஆண்டுகள் 1ஆம் இடத்தை தனதாக்கி கொண்டது. 1989ஆம் ஆண்டு சித்திரை 15ஆம் நாள் ஆண்டு விழாவை கழக மைதானத்தில் வெகு விமரிசையாக கொண்டாடியது. இவ்விழாவில் காரைநகரில் செயற்பட்ட அனைத்து விளையாட்டுக் கழகங்களும் பங்குபற்றின. கழகத்தின் ஆரம்பக் காலத்தில் திரு.S.  செல்வச்சந்திரன், திரு.S.  தேவராஜா, திரு. S.  நடராஜா, திரு. வே. குலானந்தராசா, பொ. சிறிஸ்கந்தராஜா ஆகியோர் கழகத்தின் ஆரம்பகால வெற்றிகளுக்காக உழைத்தவர்கள். திரு.செல்லையா ஞானேஸ்வரன் (ஞானி - வேதர் அடைப்பு) யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளுக்கிடையில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் 1ம் இடத்தைப் பெற்று சாதனை ஏற்படுத்தியதுடன் தேசிய மட்ட போட்டியில் 2ம் இடத்தைப் பெற்றார்.

 மீள்குடியேற்றத்தின் பின் திரு. K.C.  கந்தசாமியின் முயற்சியின் பெறுபேறாக 1997, 1998, 1999ம் ஆண்டு காலப் பகுதிகளில் கழகம் வெற்றிகளை பெற்றுக் கொண்டது. இக்காலகட்டத்தில் கலாநிதி ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலய விளையாட்டுத்துறை ஆசிரியர் திரு. அ. ஜெகதீஸ்வரனின் பயிற்சியும் வழிகாட்டலும் பாராட்டுக்குரியது எனக் குறிப்பிடுகிறார் திரு. K.C. கந்தசாமி. 

கோவளம் விளையாட்டுக் கழகம்

 விளையாட்டுத் துறையில் ஆற்றலும், ஆர்வமும் கொண்ட இளைஞர்கள் தம் ஆற்றலை  வெளிப்படுத்த கோவளம் இளைஞர் மன்றம் என்ற ஓர் அமைப்பு ரீதியாக 1981இல் இருந்து செயற்பட ஆரம்பித்தனர். கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஒரு பகுதியில் வாசிகசாலை நூல்நிலையம் என்பவற்றை ஆரம்பித்ததோடு மெலிஞ்சியோடை மைதானத்தை தமது விளையாட்டு நிகழ்வுகளுக்கு பயன்படுத்தினர். 1981ல் ஒரு விளையாட்டு போட்டியை நடாத்தியது. 1982இலிருந்து பச்சை, சிவப்பு இல்லங்களை அமைத்து 20 - 40,    40 - 50, 50இற்கு மேல் எனப் பிரித்து விளையாட்டு போட்டிகளை நடத்தினர். 1990 வரை இப்போட்டிகள் கோவளத்திற்கு அண்மையிலுள்ள குறிச்சி மக்களின் போராதரவுடன் நடைபெற்றன. விளையாட்டு போட்டிக்கு ஊர் மக்கள் வயது வேறுபாடின்றி திரண்டிருப்பர்.

 ஊர்காவற்துறை உதவி அரசாங்க அதிபர் பிரிவில் நடைபெறும் போட்டிகளில் கழக வீரர்கள் பங்குபற்றி சாதனை நிகழ்த்தி உள்ளனர். 1982, 1983ம் ஆண்டுகளில் யாழ்ப்பாண மாவட்டத்தில் நடாத்தப் பெற்ற மென்பந்து துடுப்பாட்ட போட்டியில் வெற்றிக் கிண்ணத்தை பெற்று பத்திரிகைகளினதும், விளையாட்டுதுறை அபிமானிகளினதும் பாராட்டையும் பெற்றது. வாரிவளவு நல்லியக்க சபையினால் நடாத்தப்பட்ட மென்பந்து துடுப்பாட்ட வெற்றிக் கேடயத்தை பலமுறை பெற்றுக் கொண்ட கோவளம் இளைஞர் மன்றம் வன்பந்து துடுப்பாட்டத்திலும் ஈடுபட்டு வந்தது. மாவட்ட ரீதியில்  உதவி அரசாங்க அதிபர் பிரிவு ரீதியில் நடைபெறும் உதைபந்தாட்டம், துடுப்பாட்டம் போன்ற போட்டிகளில் கழகம் பங்குபற்றி வெற்றிக் கேடயங்களை பெற்றுக் கொண்டது. காரை விளையாட்டுக் கழகத்துடன் நடைபெறும் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பானதும் உணர்வு பூர்வமானதுமாகும். காரைநகரில் அமைந்துள்ள கடற்படை அணியுடனும் 1981, 1982 ம் ஆண்டு காலப்பகுதியில் காற்பந்தாட்டப் போட்டியில் பங்குபற்றியது.

 கோவளம் இளைஞர் கழகத்தின் வெற்றியில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியில் தனது பள்ளிப் பருவத்தில் விளையாட்டுத்துறையில் நன்கு பிரகாசித்து, பின்னர், அக்கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியராக சேவையாற்றிய திரு. த. சிவகுமாரின் வழிகாட்டலும் அனுபவமும் கோவளம் இளைஞர் மன்றம் ஆற்றல் மிக்கதாக வளர்ச்சியுற காரணமாக அமைந்தது.

 திரு. செல்வரத்தினம் நீதிபதி மார்க் ஓடுகள் உரிமையாளர், திரு. வே. பரஞ்சோதி, திரு. சு. தவராசன், திரு. சு. உருத்திரசிங்கம முதலான கோவளம் வர்த்தகப் பெருமக்களின் அனுசரணையும் உற்சாகமும் குறிப்பிடத்தக்கது.

 திரு. அ. தியாகராஜா திரு. S. சேனாதிராஜா, திரு. P. பொன்னுசாமி ஆகியேர்களின் வழிகாட்டல் மேலும் உதவியாக அமைந்தது. சகல விளையாட்டு நிகழ்வுகளிலும் ஈடுபடும் திறமை கொண்ட அணியினர் கழகத்தின் வெற்றிகளுக்கு காரணமாயினர். திரு. த. சிவகுமாரன், திரு. த. சிவபாலன், திரு. தி.சிவகணேசன், திரு. தி.சிவசோதி, செ.ஞானசோதி, அ.சர்வேஸ்வரன்,    ப. நந்தகுமாரன், சி. இந்திரன், சி. ரவீந்தின், த. கண்ணன், இ. இரவீந்திரன், இ. சுரேந்திரன் ஆகியோர் ஆவர்.

களபூமி சனசமூக நிலையம்
1970இன் இறுதிப் பகுதியில் 33ஆவது ஆண்டு விழாவை கொண்டாடியது. வீதி ஓட்டப் போட்டிகள், சைக்கிள் ஓட்டப் போட்டிகள், காரைநகர் கழகங்களுக்கிடையிலான உதைபந்தாட்டப் போட்டிகள் என இரண்டு வாரங்களாகக் கொண்டாட்டம் நீடித்தது. வெற்றி பெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். ஊர்காவற்றுறை மக்கள் வங்கி முகாமையாளர் திரு. கதிர்வேலாயுதபிள்ளை பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். விழாவின் இறுதியில் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.


வாரிவளவு நல்லியக்க சபை
 பாலர் கல்வி முதல் பல்கலைக்கழகம் வரை உடற்கல்வி என்பதை காரைநகரில் நடைமுறைப்படுத்தியவர் வாரிவளவு நல்லியக்க சபை செயலாளர் திரு. சி. பத்மநாதன் (பட்டுமாமா) பாலர் பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள் கல்லூரி மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்க 14 வகையான விளையாட்டு நிகழ்வுகள், காரைநகர் கடற்படையின் ஆதரவுடன் நீச்சல் போட்டி என்பனவற்றை சித்திரை மாதங்களில் நடாத்தி சித்திரை வருடப் பிறப்பை குதூகலமாக கொண்டாட காரைநகர் மக்கள் அனைவரையும் வாரிவளவிற்கு வரைவழைப்பார்.
அன்னாரின் கல்வி செயற்பாட்டினால் காரைநகர் பண்டத்தரிப்பு கல்விக் கோட்டத்துடன் இணைந்திருந்த காலத்தில் கோட்டத்தில் 25 மாணவர்கள் ஆண்டு 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய போது 12 மாணவர்கள் காரைநகரில் சித்தி எய்துவது வழமை. வாரிவளவு நல்லியக்க சபையின் வெற்றிடம் இப்பொழுது உணரப்படும் என நம்புகின்றேன். வாரிவளவு நல்லியக்க சபையை அமரர் பத்மநாதன் நிருவாக முறையில் மீண்டும் ஆரம்பிப்பது காலத்தின் தேவை.

தற்போது காரைநகரில்  செயற்படும் விளையாட்டுக் கழகங்கள்

 1996ம் ஆண்டு மீளக்குடியமர்ந்த பின்பு ஊர்காவற்றுறை உதவி அரசாங்க அதிபர் பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட கழகங்களுக்கிடையான தடகளப் போட்டியில் சோலையான் விளையாட்டுக் கழகம் காரைநகர் பிரதேச விளையாட்டு வீரர்களை உள்ளடக்கி அந்நிகழ்ச்சிகளில் பங்குபற்றி பிரதேச வெற்றிக் கேடயத்தை தனதாக்கி வெற்றியீட்டியது. 1997, 1998, 1999ஆம் காலப்பகுதியில் பின்வரும் கழகங்கள் விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றின.

கலைத் தென்றல் :- கல்லாந்தாழ்வு பகுதி த  J/40
சிவகௌரி :- பெரியமணல்  J/40
இளம்சோலை :- கல்லின் வீதி J/46
இளம் சுடர் :-
ஒளிச்சுடர் :- காரை மத்தி  J/48
கோவளம் விளையாட்டுகழகம் :-  J/41
இளம் தென்றல் விளையாட்டுக் கழகம் 
தோப்புக்காடு விளையாட்டுக் கழகம் :-  J/44
அம்பாள் விளையாட்டுக் கழகம் :- ஊரி  J/ 42
துள்ளுமீன் விளையாட்டுக் கழகம் :- மருதபுரம்  J/45
கலாநிதி விளையாட்டுக் கழகம் :- வலந்தலை  J/47
நல்ல நண்பர்கள் விளையாட்டுக் கழகம் :- மருதடி

2003ஆம் ஆண்டு காரைநகர் தனியான உதவி அரசாங்க பிரிவாக பிரிக்கப்பட்டதன் பின்னர் இக்கழகங்கள் இப்பிரிவின் கீழ் பதிவு செய்து செயற்பட்டன. பின்பு நடைபெற்ற விளையாட்டு நிகழ்வுகளில் இவைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைய ஆரம்பித்துவிட்டன. 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க விளையாட்டுக் கழகங்களாகப் பின்வருவன செயல்படுகின்றன.
1. ஒளிச்சுடர் விளையாட்டுக் கழகம்
2. கோவளம் விளையாட்டுக் கழகம்
3. இளம் தென்றல் விளையாட்டுக் கழகம்
4. தோப்புக்காடு விளையாட்டுக் கழகம்
5. அம்பாள் விளையாட்டுக் கழகம்
6. கலாநிதி விளையாட்டுக் கழகம்
7. நல்ல நண்பர்கள்  விளையாட்டுக் கழகம்
 
2011 ஆண்டிற்கான பிரதேச மட்ட தடகளப் போட்டியில் இக்கழகங்கள் பங்குபற்றின. இதில் கலாநிதி விளையாட்டுக்கழகம் வெற்றிக் கேடயத்தை சுவீகரித்துக் கொண்டது. 2011ஆம் ஆண்டு சித்திரை வருடப்பிறப்பு தினத்தன்று விளையாட்டுக் கழகத்தினர் கலாநிதி ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலய மைதானத்தில் புத்தாண்டை பொங்கல் பொங்கி கொண்டாடினர்.

பாடசாலை விளையாட்டு நிகழ்வுகள்
 காரைநகர் பாடசாலைகளில் அன்றும் இன்றும் விளையாட்டுப் போட்டிகள் முதலாம் தவணையில் நடைபெறும். கலாநிதி.ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயம், யாழ்ரன் கல்லூரி, சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலய, மாணவர்கள் கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பெறும் பெரு விளையாட்டுக்களில் பங்குபற்றுவார்கள். கலாநிதி. ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் மாவட்ட, மாகாண, தேசிய ரீதியில் பங்குபற்றி பரிசில்கள் பெற்றுள்ளார்கள்.

 கலாநிதி. ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தின் முதலாவது மெய்வல்லுனர் போட்டி வலந்தலை கண்ணகி அம்மன் கோயிலுக்கு கிழக்கே உள்ள வெளியில் நடைபெற்றது. தினந்தோறும் மாணவர்களை ஆசிரியர்கள் விளையாட்டில் ஈடுபட இப்பகுதிக்கு அழைத்துச் செல்வது வழமை. 1953ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிழக்கு வீதியில் அமைந்துள்ள குழுவி மதவுக்கு பின்புறமாகவுள்ள தச்சன் பனையடி என்னும் இடத்தில் மாணவர்கள் விளையாட்டில் ஈடுபட்டனர். அமரர் ந. நடராஜா ஞாபகார்த்த மண்டபம் மகப்பேற்று மருத்துவமனை ஆகியவற்றை நிர்மாணித்து எஞ்சிய காணியை அவரின் துணைவியார் அமரர் தங்கம்மா நடராஜா அவர்களால் தற்போதைய விளையாட்டு மைதானம் அன்பளிக்கப்பட்டது. இம்மைதானத்தை சீரமைப்பதில் அமரர் J.C. அருளம்பலம் பெரும் பங் காற்றினார்.

 1964ஆம் ஆண்டு; கட்டப்பட்ட பார்வையாளர் அரங்கும், 1970களில் அமைக்கப்பட்ட சுற்று மதில்களும்; சேதமடைந்துள்ளது. இம்மைதான விளையாட்டு இடப்பரப்பு விஸ்தரிக்கப்பட்டு, பார்வையாளர் அரங்கு நவீன வசதிகளுடன்; அமைக்கப்பட்டு, அத்திவாரமிடப்பட்டு கம்பி வலை சுற்று வேலி (Wire mesh) அமைக்கப்பட்டு மழை காலங்களிலும் மைதானம் பாவிக்கக்கூடியதாக தயார் செய்யப்படல் வேண்டும். காரைநகர் மத்தியில் அமைந்துள்ள இம்மைதானம் மாவட்ட மைதான தரத்துக்கு தரம் உயர்த்துவதற்கு மேற்கூறிய பணிகளை நிறைவு செய்ய 10 மில்லியன் ரூபாய்கள் தேவைப்படும்.

 யாழ்ரன் கல்லூரி விளையாட்டு மைதானம் கனடா காரை கலாசார மன்றத்தின் உதவியுடன் சுற்று வேலிகள் அமைக்கப்பட்டு போதுமான விளையாட்டு இடப்பரப்பு உள்ளதாக அமைந்துள்ளது. விளையாட்டு நிகழ்வுகளுக்கு உபயோகிக்கப்படும் இடத்தின் நிலத்தன்மையை அபிவிருத்தி செய்தல், புல் நடுதல் ஆகியன விளையாட்டு நிகழ்வுகளுக்கு ஊக்குவிப்பாக அமையும் எஞ்சியுள்ள நிலப்பரப்பில் பயன்தரு மரங்களை நாட்டிப் பேணல் கல்லூரியின் கவினுறு நிலையை மேம்படுத்தும்.

 சுந்தரமூர்த்திநாயனார் வித்தியாலயத்தின் ஆரம்பகால பிரதான மண்டபம் 10 ஆண்டுகளுக்கு மேலாக பழுதடைந்து பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அம்மண்டபம் அகற்றப்பட்டு ஆலடியில் இயங்கும் ஆரம்ப பிரிவுக்கு தேவைப்படும் கட்டடத் தொகுதியை அமைக்க பயன்படுத்தலாம். இம்மண்டபம் அமைந்துள்ள இடப்பரப்பை ஏற்கனவே திட்டமிட்டவாறு விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்தல் வேண்டும்.

 வியாவில் சைவ வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் புல் நடுதல் விளையாட்டு நிகழ்வுகளுக்கு ஊக்குவிப்பாக அமையும். மைதானத்தை சுற்றி அத்திவாரம் அமைத்து அவற்றிற்கு கம்பி வலை சுற்றுவேலி; (Wire mesh) அமைத்தல் வேண்டும்.

 விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்தல் விளையாட்டுத்துறை மேம்பாட்டிற்கு அவசியமானதொன்றாகும்.

கலாநிதி ஆ. தியாகராஜா மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் யாழ் மாவட்டம், வடக்கு, கிழக்கு மாகாண போட்டிகளில் தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றிய விபரங்கள்


 1934ஆம் ஆண்டு நடைபெற்ற (ALL  CEYLON  ATHLETIC  MEET) அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான போட்டிகளில் பங்கு பற்றி திரு. அ. சுந்தரம்பிள்ளை, திரு. க. சுப்பிரமணியம் ஆகியோர் பரிசில்களைப் பெற்றுள்ளனர் என 1934ஆம் ஆண்டில் கரவெட்டியில் வெளியிடப்பட்ட ~~ஞானசித்தி|| எனும் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 1934ஆம் ஆண்டு திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலையில் ஜே.எஸ் பரீட்சையில் 13 பேர் இரண்டாம் பிரிவிலும் வடமாகாணத்தில் ஒருவர் 1ஆம் பிரிவிலும் சித்தி எய்தியமைக்கான பாராட்டு விழா சிவத்திரு. அ. சீதாராம ஐயர் தலைமையாசிரியர் தலைமையில்  நடைபெற்றுக் கொண்டிருந்த போது இவ்விருவரினதும் வெற்றிச் செய்தி கிடைக்கப்பெற்று அறிவிக்கப்பட்ட பொழுது மாணவர் எல்லைமீறி குதூகலித்தமையை அன்றைய விழாவில் சமூகமாயிருந்த மாணவர் மூலமாக அறியக்கூடியதாகவிருந்தது.
1. திரு. அ. சுந்தரம்பிள்ளை கோல் ஊன்றிப் பாய்தல், குறுந்தூர ஓட்ட வீரர் உதைபந்தாட்டத்தில் இடது கரை வீரர் (Right extreme)
2. சடையாளி பரியாரி நாராயணியின் சகோதரர் கணபதிப்பள்ளை பொன்னாலையில் வசித்தவர். தனது மகன் சுப்பிரமணியத்தை காரை இந்துக் கல்லூரியில் கற்பதற்காக அனுப்பி வைத்தார். திரு. சுப்பிரமணியம் குறுந்தூர ஓட்ட வீரர்.
3. 1960ஆம் ஆண்டின் முற்பகுதியில் காரைநகர் இந்துக் கல்லூரியில் கல்வி பயின்ற மாப்பாணவூரியை சேர்ந்த திரு. வேலுப்பிள்ளை சிவம்; அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டிகளில் பங்குபற்றினார்.
4. செல்வன.; செல்வரத்தினம் இராதாகோபாலன் 1973, 1974ஆம் ஆண்டுகளில் 13 வ. கீ  15 வ. கீ ஆண் பிரிவுகளில் யாழ் மாவட்ட பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டியில் 100அ, நீளம் பாய்தல், உயரம் பாய்தல் நிகழ்ச்சிகளில் 1ஆம் இடங்களைப் பெற்று இலங்கைப் பாடசாலைகள் சங்க 1973ஆம் ஆண்டு மெய்வல்லுனர் போட்டியில் 100அஇ உயரம் பாய்தல் ஆகிய நிகழ்ச்சிகளில் 1ஆம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். நீளம் பாய்தல் நிகழ்வில் 2ஆம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். 1974 இல் 100m 1ஆம் இடம் தங்கப்பதக்கம் நீளம் பாய்தல் 2ஆம் இடம் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
5) செல்வன். கந்தமூர்த்தி ஆனந்தசற்குணநாதன்
 1978, 1977, 1980, 1981, 1982ம் ஆண்டுகளில் 15 வ. கீ ஆண், 17 வ. கீ. ஆண், 19 வ. கீ. ஆண் ஆகிய பிரிவுகளில் 200அஇ 400அஇ உயரம் பாய்தல், ஈட்டி எறிதல், 400m தடைதாண்டல், தட்டு எறிதல், முப்பாய்ச்சல் ஆகிய நிகழ்ச்சிகளில் யாழ் மாவட்ட பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டியில் 1ஆம் இடங்களைப் பெற்று இலங்கைப் பாடசாலைகள் சங்க மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றியவர். 1980ஆம் ஆண்டு: இலங்கைப் பாடசாலைகள் சங்க மெய்வல்லுனர் போட்டியில் 400அ தடை தாண்டலில் 4ஆம் இடத்தைப் பெற்றவர்.
6) செல்வன். சபாரத்தினம் கோவிந்தராசா
 1977, 1978, 1979, 1980, 1981ஆம் ஆண்டுகளில் 13 வ.கீ. ஆண், 15 வ.கீ ஆண், 17 வ.கீ. ஆண், 19 வ.கீ. ஆண் ஆகிய பிரிவுகளில் 100m 200m  நீளம் பாய்தல் நிகழ்ச்சிகளில் யாழ் மாவட்ட மெய்வல்லுனர் போட்டியில் 1ஆம் இடத்தைப் பெற்று இலங்கைப் பாடசாலைகள் சங்க மெய்வல்லுனர் போட்டிக்கு தகுதி பெற்று பங்குபற்றியவர். 100m 200m நிகழ்ச்சிகளில் தெரிவுப் போட்டியில் தெரிவு செய்யப்பட்டு இறுதிப் போட்டிகள் வரை முன்னேறியவர்.

7) செல்வன். திருநாவுக்கரசு யோகராசா
 1980, 1981, 1982ம் ஆண்டுகளில் 17 வ.கீ. ஆண், 19 வ.கீ. ஆண்  ஆகிய பிரிவுகளில் 1500m 3000அ நிகழ்ச்சிகளில் யாழ் மாவட்டப் பாடசாலைகள் மெய்வல்லுனர் போட்டியில் 1ஆம் இடத்தைப் பெற்று இலங்கை பாடசாலைகள் சங்க மெய்வல்லுனர் போட்டியில் பங்குபற்றியவர்.

8) 4ஒ100இ 4ஒ400 அஞ்சல் அணிகள் யாழ் மாவட்ட பாடசாலைகளு;கிடையில் கல்வித் திணைக்களம் நடாத்திய போட்டியில் தேசிய ரீதியிலான போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டும் போட்டியில் பங்குபற்றவில்லை அணி வீரர்கள் விபரம்
 1. ந. யோகநாதன்    1.  ந. சுந்தரேஸ்வரன்
 2. வே. பரராஜசிங்கம்    2. பொ. இராசரத்தினம் 
 3. ந. உருத்திரசிவம்    3. மு. அழகேந்திரன்
 4. ந. ஜீவராஜ்      4. க. சிவலிங்கம்
 இந்த மெய்வல்லுனர் போட்டியில் பல நிகழ்ச்சிகளில் வெற்றிகளைப் பெற்று காரை இந்துக் கல்லூரி 1ஆம் இடத்தைப் பெற்றது. இப்போட்டியின் பிரதம அதிதி திரு. S. தங்கராசா, பிரதம கல்வி அதிகாரி உரையாற்றும் போது கிராமப் பாடசாலை ஒன்று யாழ் மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலைகளுடன் போட்டியிட்டு 1ஆம் இடத்தைப் பெற்றமை அப்பாடசாலைச் சமூகம் விளையாட்டில் எடுத்துக் கொண்ட முயற்சியும் அர்ப்பணிப்பும் பாராட்டப்பட வேண்டியது என்று குறிப்பிட்டார்.

 மேற்கூறப்பட்ட இலக்கங்கள் 04. - 07 வரையான நிகழ்வுகள் திரு. அ. சோமஸ்கந்தன் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியராக கடமை ஆற்றிய காலத்தில் பயிற்றுவிக்கப்பட்டு யாழ் மாவட்ட ரீதியில் தெரிவு செய்யப்பட்டு தேசிய போட்டிகளில் பங்குபற்றியவர்கள் (08 உட்பட)

  திரு. அ. சோமஸ்கந்தன் வடமராட்சியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்ப்பாணத்தில் வசித்தவர். 1965ஆம் ஆண்டில் இருந்து 1983 வரை கல்லூரியின் விஞ்ஞான ஆசிரியராக கடமை ஆற்றியதுடன் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியராக கடமை ஆற்றிய காலத்தில் மேற்கூறப்பட்ட மாணவர்கள் பயிற்றுவிக்கப்பட்டு மாவட்ட, தேசிய மட்ட விருதுகளை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர். விஞ்ஞானம் கற்பித்தலில் நுட்பங்களை கையாண்டு கற்பித்தமையால் மாணவர் மனங்களை வென்றவர். காரைநகர் விளையாட்டுத்துறைக்கு திரு. சோமஸ்கந்தனின் பங்களிப்பு காத்திரமானவை
9) செல்வன் சொர்ணலிங்கம் புஸ்பலிங்கம்
 2001ஆம் ஆண்டு 15 வ.கீ ஆண்கள் பிரிவில் உயரம் பாய்தல் நிகழ்ச்சியில் வடகிழக்கு மாகாண மட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றினார். தேசியமட்டத்தில் 10ஆம் இடத்தைப் பெற்றார்.
10)  2002, 2003ஆம் ஆண்டுகளில் 17 வ.கீ. ஆண் பிரிவில் வடகிழக்கு மாகாண மட்டப் போட்டியில் 1ஆம் இடத்தைப் பெற்றதுடன் 1.72m உயரத்தைத் தாண்டி புதிய சாதனையையும் ஏற்படுத்தி தங்கப் பதக்கம் பெற்றவர்.  தேசிய மட்டத்தில் 2002ஆம் ஆண்டு 8ஆம் இடத்தைப் பெற்றார்.
 அமெரிக்கரான Fosbury என்பவர் Fosbury Flop  என்று அழைக்கப்படும் நுட்பத்தை அறிமுகப்படுத்தி 1968ல் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கத்தை வென்ற நுட்பத்தை செல்வன் சொ.புஸ்பலிங்கம் காரைநகரில் முதன்முறையாக கையாண்டார். இம்மாணவன் வைக்கோலை சாக்கிற்குள் நிறைத்து அவற்றை மெத்தையாகப் பாவித்து (பாய்;தலுக்கான மெத்தை இன்மையால்) பாய்வதும் பேட்டியும் காரை ஆதித்தியன் 2005 சுடர் 01 இல் பிரசுரமாகியிருந்தது.
11) செல்வி காந்திதிலகர் உதயா
 2001ம் ஆண்டு 17வ.கீ.பெண்கள் பிரிவில் 1500m நிகழ்ச்சியில் 3ம் இடத்தை வடகிழக்கு மாகாணப் போட்டியில் பெற்று தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றினார்.
12) செல்வி பரமானந்தசிவம் கலைமகள்
 2001ம் ஆண்டு 19வ.கீ. பெண்கள் பிரிவில் 1500m  3000m நிகழ்ச்சியில் வடகிழக்கு மாகாண மட்டத்தில் 3ஆம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொண்டார்.
13) செல்வன் சந்திரசேகரம் சந்திரகுமார்
 2003ம் ஆண்டு 14 வ.கீ. ஆண்கள் பிரிவில் யாழ் மாவட்ட Junior Atheltic  Meet  இல் 1ஆம் இடத்தைப் பெற்று தேசிய மட்ட Junior Atheltic  Meet  இல் பங்குபற்றினார். 
 
14). தேசியமட்டப் போட்டியில் தகுதி பெற்றிருந்தும் தேசிய மட்டப் போட்டியில் பங்குபற்றாத மாணவர் விபரம்
• செல்வி வேலாயுதம் சிவதாரணி
 2002ம் ஆண்டு 19 வ.கீ. பெண்கள் பிரிவில் 400m தடைதாண்டல் நிகழ்ச்சியில் வடகிழக்கு மாகாண மட்டத்தில் 3ம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டார்.
• செல்வன் பேரின்பராசா சசிக்குமார்
  2001ம் ஆண்டு 13 வ.கீ.ஆண்.கள் பிரிவில் வடகிழக்கு மாகாண மட்டப் போட்டியில் m நிகழ்ச்சியில் 3ம் இடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டார்.
• செல்வி சோ.திவ்வியா
  2004ம் ஆண்டு Jaffna  District  Junior  Athletic meet இல் 16 வ.கீ.பெண்கள் பிரிவில் நீளம் பாய்தலில் 1ம் இடத்தைப் பெற்று தங்கப்பதக்கம் வென்று தேசிய மட்ட Junior  Athletic meet இற்கு தெரிவுசெய்யப்பட்டார்.
• இலக்கம் 9 - 13 வரையிலான நிகழ்வுகள் திருஅ.ஜெகதீஸ்வரன் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியராக கடமை ஆற்றிய காலத்தில் பயிற்றுவிக்கப்பட்டு வடகிழக்கு மாகாண ரீதியில் தெரிவு செய்யப்பட்டு தேசிய போட்டியில் பங்கு பற்றிய மாணவர்கள். (14 உட்பட)
 திரு. அ. ஜெகதீஸ்வரன் விஞ்ஞான பாட ஆசிரியராக 1996 - 2010 வரை கடமை ஆற்றியவர். செல்வன். சொ. புஸ்பலிங்கம் ஆதித்தனுக்கு வழங்கிய பேட்டியில் தனது திறமையை இனங்கண்டு பயிற்றுவித்து, மேலதிக பயிற்சிக்கு யாழ் மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் பயிற்றுவிப்பாளர் திரு. செ. ரமணனிடம் தனது மோட்டார் சைக்கிளில் யாழ் மத்திய கல்லூரி மைதானத்திற்கு அழைத்துச் சென்று பயிற்சி வழங்கி சாதனை படைக்க வழி செய்தவர் திரு. அ. ஜெகதீஸ்வரன் என நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார். திரு. அ. ஜெகதீஸ்வரன் வீரர்களுக்கு வழங்கிய பயிற்சியும் வழிகாட்டலும் 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் சோலையான் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற துணைநின்றதாக சோலையான் விளையாட்டுக் கழக தலைவர் திரு. K .C. கந்தசாமி குறிப்பிட்டுள்ளார். திரு. அ. ஜெகதீஸ்வரன் வாய்ப்புகளும் வசதிகளும் அரிதான போக்குவரத்து கஸ்டங்களுக்கு மத்தியில், மிக நெருக்கடியான கால கட்டத்தில் ஆற்றிய பணி என்றும் பாராட்டுக்குரியது.

உதைபந்தாட்டம்
செல்வன். கந்தமூர்த்தி ஆனந்தசற்குணநாதன் (சக்கலாவோடை) யாழ்ப்பாண மாவட்ட பாடசாலைகள் கழகத்தின் ஆதரவுடன் 1981இல் யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கு இடையிலான உதைபந்தாட்டப் போடடிகளில் யாழ் மாவட்டத்தில் முன்னணி வீரராக தெரிவு செய்யப்பட்டு இலங்கை பாடசாலை உதைபந்தாட்ட அணி தெரிவிற்கான தெரிவு போட்டிகளில் பங்குபற்றியவர்.

 கீழ் குறிப்பிடப்படும் வீரர்கள் யாழ்ப்பாண பாடசாலைகளின் உதைபந்தாட்ட அணிகளில் இடம் பெற்றதோடு மாத்திரமல்லாமல் யாழ் மாவட்டத்தில் குறிப்பிட்டுச் சொல்லும் திகழ்ந்தார்கள்.
 
 திரு. அ. சுந்தரம்பிள்ளை (சிவன் கோவிலடி) யாழ்ப்பாண கல்லூரியின் உதைபந்தாட்ட வீரர்.
 அமரர் திரு. தர்மரத்தினம் (புதுறோட்டு) யாழ்ப்பாணக் கல்லூரி உதைபந்தாட்ட வீரர், துடுப்பாட்ட அணித்தலைவர் துடுப்பாட்டத்தில் சாதனை ஏற்படுத்தியவர். கெப்டன். தர்மரத்தினம் ஆங்கிலேயர் நாட்டு இராணுவத்தில் R.A.S.C Royal  Artillery  Service இல் சேர்ந்து ஜேர்மன் நாட்டு படைகளுக்கு எதிரான யுத்தத்pல் பின்நாளில் பங்குபற்றியவர்.
  அமரர் வே.சிவசுப்பிரமணியம் (நடுத்தெரு) யாழ்ப்பாணக் கல்லூரி அணித் தலைவர்.
 அமரர் கனகரத்தினம் (புது றோட்டு) பரமேஸ்வரா கல்லூரி அணித் தலைவர்
  பூதவுடல் தாங்கிய குதிரை வண்டியை கல்லூரி உதைபந்தாட்ட அணிவீரர்களும், மாணவர்களும் மயானம் வரை இழுத்துச் சென்று மரியாதை செலுத்தினர்.
 திரு. A. இரத்தினகோபால் (புது றோட்டு;) 1945, 1946ஆம் ஆண்டுகளில் யாழ் மத்திய கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி உதைபந்தாட்ட அணிகளின் தலைவர். 1945ஆம் ஆண்டு யாழ் மாவட்டக் கல்லூரிகளில் திறமையான கால்பந்தாட்ட வீரராக தெரிவு செய்யப்பட்டவர்.
 திரு A .செல்வரத்தினம் (WALKERS, மாப்பானவூரி) 1951ம் ஆண்டு காரைநகர் இந்துக்கல்லூரி உதைபந்தாட்ட அணித்தலைவர், துடுப்பாட்ட வீரர். காரை இந்துக்கல்லூரி உதைபந்தாட்ட அணியின் பயிற்றுவிப்பாளர்.
 திரு நல்லையா பொன்னையா (மாப்பாணவூரி) சுண்ணாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி உதைபந்தாட்ட அணித் தலைவர்.

திரு.சண்முகம் சிவசோதி (களபூமி) யாழ் மத்திய கல்லூரியின் துடுப்பாட்ட அணித்தலைவர். துடுப்பாட்டத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டு பிரபல்யமான துடுப்பாட்ட வீரர்.
திரு. செல்வரத்தினம் இராதாகிருஸ்ணன் (மாப்பாணவூரி) 1964ம் ஆண்டுகளில் சுண்ணாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரி உதைபந்தாட்ட அணியின் சிறந்த கோல் காப்பாளர்.
 திரு.செல்வரத்தினம் இராதா கோபாலன் (மாப்பாணவூரி) 1975ம் ஆண்டுகளில் யாழ்ப்பாண இந்துக் கல்லூரியின் சிறந்த கோல் காப்பாளர்.
 திரு. த. சிவகுமார் (கோவளம்) 1978இல் யாழ் இந்துக் கல்லூரி உதைபந்தாட்ட அணித் ;தலைவர் 1978, 1979 துடுப்பாட்ட, ஹொக்கி, அணிகளின் பிரதி தலைவர். 1976இல் இலங்கை பத்திரிகை சம்மேளனம் நாடாளவிய ரீதியில் நடாத்திய துடுப்பாட்ட போட்டியில் பங்குபற்றிய யாழ் இந்துக் கல்லூரி அணி வீரர்; யாழ் இந்துக் கல்லூரி இறுதிப் போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரியுடன் விளையாடி இரண்டாம் இடத்தைப் பெற்றது.
1979ல் திரு.பாலசிங்கம் ஆனந்தகுமார் (அரசடிக்காடு) யாழ்ப்பாணக் கல்லூரியின் உதைபந்தாட்ட, துடுப்பாட்ட அணித்தலைவர்.
1983ல் மயில்வாகனம் சிவராஜா (பலுகாடு) மகாஜானக் கல்லூரியின் உதைபந்தாட்ட அணித்தலைவர்.
1986ல் கனகசபை சத்தியதாசன் (அல்லின் வீதி) மகாஜானக் கல்லூரியின் உதைபந்தாட்ட அணித்தலைவர்.
திரு. இராஜதுரை இரவீந்திரன் (கோவளம்) 1992 - 1996 ஆண்டுகளில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்கும் காலத்தில் மொறட்டுவ பல்கலைக்கழக உதைபந்தாட்ட அணி வீரர்.
 திரு.தர்மலிங்கம் திருச்செல்வம் (திக்கரை) 1991 - 1994 ஆண்டுகளில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்தில் கற்கும் காலத்தில் மொறட்டுவ பல்கலைக்கழக உதைபந்தாட்ட அணித்தலைவர்.
 திரு.கந்தையா கமலேந்திரன் (திக்கரை) சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாலயம் கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கொழும்பு டி.எஸ் சேனநாயக்கா கல்லூயில் கல்வி பயின்றவர். 1997ல் நாடாளவிய ரீதியில் நடைபெற்ற மைலோ வெற்றிக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டியில் பங்குபற்றியதன் மூலம் கல்லூரியில் இருந்து இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்ட மூவரில் ஒருவர். மலேசியாவில் நடைபெற்ற மலேசியா பாடசாலைகள் அணியுடனும், இலங்கையில் நடைபெற்ற டூபாய் அணி;, கர்கிஸ்தான் அணி, மாலைதீவு மாணவர்கள் இலங்கையில் கற்கும் றோயல் சர்வதேச பாடசாலை அணி, லண்டன் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சர்வதேச பாடசாலை அணிகளுடன் இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்ட அணி சார்பாக போட்டிகளில் பங்குபற்றியவர்.
உதைபந்தாட்டத்தில் தன்னை பயிற்றுவித்த ஆசிரியர் திரு. தம்பிராஜா சிவபாலனின் அனுசரனையுடனும் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உதவியுடனும் காரைநகரில் உதைபந்தாட்டத்தை மேன்மைப்படுத்த திட்டம் ஒன்றை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

• திரு. க. சத்தியபாலன் (அல்லின் வீதி) மகாஜனக் கல்லூரி, சோலையான் விளையாட்டுக் கழக உதைபந்தாட்ட அணி வீரர். 2007இலிருந்து வடமாகாண கல்விப் பணிமனை உடற்கல்வி உதவிப் கல்விப் பணிப்பளாராக கடமையாற்றுகின்றார்.

விளையாட்டுத் துறை ரசிகர்கள், ஆர்வலர்கள் நல்கிய பங்களிப்பு விளையாட்டுத் துறை விருத்திக்கு ஒரு காரணமாகும். உதைபந்தாட்டப் போட்டிகளை ரசிப்பதற்கு ரசிகர் கூட்டமே இருந்தது. உதைபந்தாட்டப் போட்டிகளின் பின்னர் வீரர்களுக்கு நன்றி கூறுவதும் பாரட்டுவதும் பண்பாக இருந்தன. இன்றும் பலர் கடந்த கால விளையாட்டு நிகழ்வுகளை நினைவுகூர்ந்து உரையாடும் சம்பவங்களும் உண்டு. இவ்வழக்கொழிந்து முகந்தெரியாத விளையாட்டு வீரர்களின் நிகழ்வுகளை தொலைக்காட்சியில் பார்ப்பதை வழக்காக்கியுள்ளோம்.

“HISTORY   REPEATS” வரலாறு மீள் எழும் என வாக்கியத்திற்கு அமைவாக கடந்த சென்ற பொற்காலத்தை எதிர் காலத்தில் உருவாக்க வரலாறு வழிகாட்டியாக அமையும் என்று நம்புகிறேன்.
 

A sound mind in a sound body

 

நான் அறிந்தவற்றையும், விளையாட்டில் ஈடுபட்டுள்ளோர், அக்கறை உள்ள ஆர்வலர்கள், காரைநகர் தொடர்பான ஆவணங்கள் மூலம் பெற்ற தகவல்களையும் கொண்டு கட்டுரை வரையப்பட்டுள்ளது. கட்டுரையை ஆக்க தகவல்களை வழங்கிய அனைவருக்கும் நன்றி கூறுகின்றேன். நீக்கப்பட வேண்டியவை, சேர்க்கப்படவேண்டியவை நிறைய இருக்கலாம். ஆக்கபூர்வமான ஆலோசனைகளை எதிர்பார்கின்றேன். தவறுகள் இருப்பின் தயவுடன் பொறுத்து அருள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் நிறைவுகின்றேன்.

 


கட்டுரையாளர் பற்றி

திரு. எஸ்.கே சதாசிவம் காரை இந்துக் கல்லூரியினதும் காரை விளையாட்டுக் கழகத்தினதும் கோல் காப்பாளர்; என்ற நிலையில் பலருக்கு அறிமுகமானவர். கலாநிதி ஆ.தியாகராஜா மத்திய மகாவித்தியாலயம் வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் உதைபந்தாட்ட அணிகளின்  பயிற்றுவிப்பாளர். 1977 தொடக்கம் 1991 வரையிலான காலப்பகுதியில் காரை விளையாட்டுக் கழகத்தை ஓர் உன்னத நிலையில் இயக்கியவர். யாழ் மாவட்ட வடகிழக்கு மாகாண மெய்வல்லுனர் உடற்பயிற்சி போட்டிகளை நடாத்துவதில் கல்வித் திணைக்களத்துடன் இணைந்து பணியாற்றியவர். 1991ஆம் ஆண்டு இடப்பெயர்வின் போது காரைநகர் பாடசாலைகளை காரைநகருக்கு வெளியே இயங்கச் செய்வதிலும் மிகவும் நெருக்கடியான 1999 முதல் 2002 வரையிலான காலப்பகுதியில் பரீட்சைத் திணைக்கள பரீட்சைகளையும் ஏனைய பரீட்சைகளையும் அனைத்து கல்விச் செயற்பாடுகளையும் வன்னி மாவட்டத்தில் சுமுகமாக நடைபெற வெற்றிகரமாக செயற்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட அலுவலர். ஜேர்மன் தொழில்நுட்ப ஒத்துழைப்பகத்தின் (German Technical Cooperation GTZ ) வடகிழக்கு மாகாண செயற்றிட்டங்களில் கடந்த எட்டு ஆண்டுகளாக கடமையாற்றுகின்றார்.

 

 

 

Copyright 2011 காரைநகரும் விளையாட்டுத் துறையும் . Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.