மரணம்
மரணம்
ஒவ்வொரு மூலத்திற்கும் ஒரு முடிவு தவிர்க்க முடியாதது.
மனித வாழ்க்கையில் மரணமும் அப்படித்தான்!
மரணம் ஆதிசங்கரரை 32 வயதில் முத்தமிட்டது. இயேசு கிறிஸ்துவை 35 வயதில் முடித்து விட்டது. பாரதியை 39 வயதில் பதம் பார்த்தது. விவேகானந்தரை 40 நடப்பதற்குள் அனைத்துக்கொண்டது.
இளமையிலேயே இறக்கும் பொழுது “சாவே உனக்கொருநாள் சாவு வந்து சேராதோ” என்று சபிக்கத்தான் தோன்றுகிறது.
நீண்ட காலம் வாழ்வது தான் நிறைவான வாழ்க்கை என நினைப்பது அறியாமையா? மரணம் எத்தனையோ மனிதர்களை துன்பங்களிலிருந்து விடுவித்திருந்தாலும் அந்த மரணம் வாழ்க்கையை நேசிக்க வழியில்லாத பொழுது மட்டுமே மரியாதை பெறுகிறது. உடல் ரணமாகும் பொழுது உலகிலுள்ள விதவிதமான மருந்துகள் உதவலாம். உயிரே ரணமாகும் பொழுது மரணமே அதற்கு நிவாரணம். அதற்காக மரணத்தை நாம் தேடி போகக்கூடாது. தற்கொலையைப் போல வாழ்க்கையை அவமதிக்கும் செயல் வேறெதுவும் இல்லை. மரணம் எம்மைத் தேடி வரலாமா? ஓவ்வொருவரிடமும் மரணம் ஒரு நாள் தேவதையைப்போல் தானே வந்து கைநீட்டி அழைக்கும்.
நேற்று நம் கண் முன்னாலேயே நம்மைப் பெற்ற தாய் இறந்து போனார்களே! தாய் இறந்த பொழுது எல்லார் முன்னும் மரணம் வந்து தைரியமாக நின்றதே! அதை எவர்களால் தடுக்க முடிந்தது!
ஜயிரண்டு திங்களாய் அங்கமெல்லாம் நொந்து பெற்றுப்
பையல் என்றபோதே பரிந்தெடுத்துச் செய்யஇரு
கைபுறத்திலே ஏந்திக் கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.
பத்து மாதங்கள் என்னைச் சுமந்து பெற்றாள் என் தாய். அப்படிப் பெறுவதற்கு முன் என் தாய் பட்ட துன்பத்திற்கு அளவே இல்லை. நான் அவள் மகள் மகன் என்ற தெரிந்த பொழுது அளவற்ற இன்பம் அடைந்தாள். தன் பெண்மையால் என்னை தன் மார்பில் அணைத்து அமுதூட்டினாள். அத்தகைய தாயை இந்தப் பிறப்பில் இழந்துவிட்டோம். இனி எந்தப் பிறப்பில் காணப் போகின்றேன் என்று கூறினார் பட்டினத்தார்.
வாழ்க்கையில் எதிர்முனையான மரணத்தை நோக்கியே பிரயாணம் செய்து கொண்டு இருக்கின்றோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மரணம் என்றால் என்ன?
அது ஒரு நீண்ட உறக்கம். அவ்வளவு தான் என ஞானிகள் யோகிகள் சித்தர்கள் போதித்தாலும் அந்த ரணம் அந்தக் காயம் ஆற எவ்வளவு ஆறதல் சொன்னாலும் மனது ஒரு கனநேரமாவது அதை மீட்டுப்பார்க்கத்தான் ஆசைப்படுகிறது.
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. என்கிறது வள்ளுவம்.
மரணம் இயற்கை. இதை உணர்ந்து அமைதியாக இருக்க வேண்டும் என்கிறது கீதை.
கண்ணா! உன் உபதேசத்தில் மரணம் இயற்கை தான். ஏற்றுக்கொள்கின்றேன். எதிராக வந்து யமனாக மாறி உயிரைப்பறிப்பதும் இயற்கையா?
மரணத்தை தடுக்க யாராலும் இயலாது. உடல்கள் யாவும் அழியக்கூடியது. பிறந்தவன் இறப்பதும் இறந்தவன் பிறப்பதும் உறுதி. இதை எண்ணி வருந்துவது ஏன் என்று தத்துவ விசாரம் வேறு சொல்கிறாய்.
ஒரு தாய்! தாய்மை! அணைத்திற்கும் மேலாக அம்மா! உலகத்தின் எல்லா மொழிகளிலும் மிக அழகான சொல் ஒன்று அழிந்து போனதே............. இறைவா! பத்து மாதம் சுமந்து பின்பு அதை உலகத்தில் உயிர்மெய்யாய் உலவ விட்டவள் இன்று உயிரோடு இல்லையே!
தன்னலமற்ற துன்பங்களைச் சகித்துக்கொள்கிறஇ எந்தப் பாவத்தையும் மன்னிக்கிற மனோபாவம் கொண்டவளை குடிபோதையில் வந்து ஒருவன் கொன்று விட்டானே. உலகத்தின் எல்லா உறவுகளையும் துறந்துவிட்ட துறவிகள் கூட எந்த நிலையிலும் துறக்க முடியாத உறவு தாயின் உறவு. அந்தத் தாயையே இறைவா நீ எடுத்துக்கொண்டு அந்தப் பிஞ்சுகளை தவிக்க விட்டாயே!
குறுந்தொகை காட்டும் ஒரு காட்சி! ஆண் குரங்கு இறந்து விடுகிறது. காதல் மிக்க பெண் குரங்கு கைம்மைக் கோலத்தில் கண்ணீரோடு வாழ விரும்பாமல் தானும் இறக்கத் துடிக்கிறது. ஆனால் தன் வயிற்றை இறுக்கப் பற்றியிருக்கும் குட்டிக் குரங்கை நினைத்தும் சாவைப் பற்றிய சிந்தனையை அது தள்ளி வைக்கிறது. தாயின் துணையின்றித் தானே மரக் கிளையைக் குட்டிக்குரங்கு பற்றிக்கொள்ளும் காலம் வரை காத்திருக்கிறது. அதற்குப் பின்பு மலை உச்சியிலிருந்து விழுந்து மரணத்தை முத்தமிடுகிறது. குரங்கிற்கே அறிவைக்கொடுத்து வாழவைத்தவா இவளை ஏன் ஜயா எடுத்தாய். விடை சொல்.
யாருக்கும் நேரம் இல்லை! இயந்திர கதியில் ஓடிக்கொண்டிருக்கிறது உலகம் என்றாலும் சகமனிதர்களைப் பற்றிச் சிந்திக்க மனமில்லாமல் எப்படி இருக்க முடியும். வணிகப் பொருளாதார வாழ்க்கை வேகத்தில் மக்களுக்கு “மனிதம்” முற்றாக மறந்து போய்விட்டதா?
அரச போகங்களை துறந்து ஆறு ஆண்டுகள் காட்டில் கடுந்தவம் இயற்றி இறுதியில் போதி மரத்தடியில் ஞானம் பெற்று 80 வயது வரை ஊர் ஊராக நடந்து திரிந்து புத்தர் மக்களிடம் பௌத்தம் பரப்பியது ஏன்?
பாடுகளைச் சுமந்து சிலுவையில் அறையப்பட்டு தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்? என்று வேதனையில் குரல் கொடுத்து யேசு தலை சாய்த்தது ஏன்?
செல்வச் சீமாட்டி கதீஜாவின் கணவனாய் இன்பங்களை அனுபிவிக்காமல் கல்லடியும் சொல்லடியும் காயங்களும் ஏற்று இஸ்லாமை அரபு மக்களின் இதயங்களில் இறக்கி வைக்க நபிகள் துடித்தது ஏன்?
ஒரே பதில் சமூக மக்களிடம் அவர்களுக்கு இருந்த எல்லையற்ற அன்புதான்! அந்த அன்பில் விளைந்தது தான் மனிதம்!
பிறர்பால் ஊற்றெடுக்கும் கைம்மாறு கருதாத உண்மையான அன்பு அடுத்தவர் துன்பம் தீர்க்கத் துடிக்கும் அருட்கருணை தன்னுயிர் போல் எல்லா உயிர்களையும் பாவிக்கும் பண்புநலம் ஆகியவற்றின் மொத்த வடிவமே உருக்குலைந்து போனதோ.
தோகை விரித்த மயிலுக்கும் துவண்டு விழுந்து கொடி மலருக்கும் மனம் இரங்குபவர்கள் நாங்கள். முல்லைக்கொடிக்கு ஒரு மூங்கில் போதும் என்று பாரிக்குத் தோன்றவில்லை. மயிலுக்கு மேகத்தால் நடுக்கமில்லை என்று பேகனுக்குப் புரியவில்லை. காரணம் அவர்களுடைய இதயங்களை ஈரப்படுத்தியது இன்னொரு ஜூவனின் துயர் துடைக்கும் அன்பும் அருளுமே!
கனடா காரை கலாச்சார மன்றத்திற்கு மட்டுமன்றி அந்த மண்ணின் மனிதங்களுக்கும் வேண்டுவது இது தான்.
கணபதிப்பிள்ளை ரஞ்சன்
பிறம்றன் கனடா.



