யா/காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்(காரைநகர் இந்துக்கல்லூரி) பழைய மாணவர் சங்கம் - கனடா

Published Date

யா/காரைநகர் கலாநிதி ஆ.தியாகராசா ம.ம.வித்தியாலயம்(காரைநகர் இந்துக்கல்லூரி)
பழைய மாணவர் சங்கம் - கனடா

புதிய நிர்வாகசபைத் தெரிவுப் பொதுக்கூட்டம் 28.01.2012 சனிக்கிழமை செல்வச் சந்நிதி முருகன் கோயில் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுமார் 40பேர் வரையில் கலந்து கொண்டனர்.

சங்கீத பூஷணம் காரை ஆ.புண்ணியமூர்;த்தி அவர்களின் தமிழ்த்தாய் வாழ்த்தும் அதனைத் தொடர்ந்து கல்லூரி கீதமும் பாடப்பட்டு கூட்டம் ஆரம்பிக்கப்பட்டது. முதலில் திரு. திரு.தம்பையா அம்பிகைபாகன் அவர்கள் (முன்னாள் ஆசிரிய ஆலோசகர் கொழும்பு கல்வி வலயம்) அவர்கள் ஆரம்ப உரையாற்றினார். அவர் தமதுரையில் கல்லூரியின் வளர்ச்சியிலும் கல்லூரியில் கல்வி கற்றவர்கள் எப்படிப்பட்ட முன்னேற்றத்துடன் வாழ்கின்றார்கள் என்பது பற்றியும் கூறி இங்கு அமையப்போகும் பழைய மாணவர் சங்கம் கல்லூரிக்கு பலவித உதவிகளைச் செய்வதற்கு ஏதுவாக இருக்குமென தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முன்னாள் கனடா-காரை கலாச்சார மன்றத்தின் தலைவரும் கணக்காளருமாகிய திரு.வேலுப்பிள்ளை ராஜேந்திரம் மன்றத்தின் முக்கியத்துவம் பேணிப்பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் காரை இந்துக்கல்லூரியின் பழைய மாணவர் சங்கம்; இன்றைய கால கட்டத்தில் தேவை என்பதனையும் வலியுறுத்தினார். இப்படியான சங்கங்களில் இணைந்து தொண்டாற்ற வருபவர்கள் மனச்தூய்மையுடன் பொதுச்சேவையாற்றுவது மிக்கநல்லது எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மன்றத்தின் போஷகர் சபை உறுப்பினர் திரு. சிவசுப்பிரமணியம் சிவராமலிங்கம் உரையாற்றும் போது தான் அண்மையில் காரைநகர் சென்றிருந்தபோது காரைநகர் இந்துக்கல்லூரியில் நடைபெற்ற பழைய மாணவர்சங்க கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் நேற்று காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர் திரு. பொன் சிவானந்தராஜாவுடன் தான் தொடர்பு கொண்டபோது இந்த வைபவம் பற்றி வினாவியபோது அவர் அதற்கு சம்மதம் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். இந்தச் சந்தர்ப்பத்தில் இந்த மாணவர் சங்கம் அமைப்பது நல்ல விடயம் எனவும் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து கூட்டத்திற்கு சமூகமளித்திருந்த சபையோரிடம் கருத்துத் தெரிவிக்குமாறு கேட்டபோது முதலில் மன்றத்தின் போஷகர் சபை உறுப்பினர் திரு. சிவசுப்பிரமணியம் குகநேசபவான் தனதுரையில் பழைய மாணவர் சங்கங்கள் கனடா காரை கலாச்சார மன்றத்துடன் சேர்ந்து இயங்குவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி மிகச்சுருக்கமாக விளக்கியிருந்தார். அத்துடன் பொதுச்சேவையில் பங்குபற்ற வருபவர்கள் குறுகிய மனப்பான்மையை விட்டு பரந்த மனப்பான்மையுடன் மக்களின் கருத்துக்களுடன் ஒன்றிணைந்து போகக்கூடியவர்களாக இருக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து சபையிலிருந்த ஏனையோரும் பல கருத்துக்களைத் தெரிவித்து இந்த பழையமாணவர் சங்கத்திற்கு ஆதரவைத் தெரிவித்திருந்தனர். இங்கு சமூகம் தந்திருந்த அனைவரும் கனடா காரை கலாச்சார மன்றத்தின் ஒற்றுமை பேணப்பட்டு மன்றம் மேன்மேலும் உயர்வடைவதற்கு இப்படிப்பட்ட மாணவர் சங்கங்கள் உறுதுணையாக இருந்து கடமையாற்றவேண்டும் என உறுதியாகக் கேட்டுக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மன்றத்தின் தலைவர் திரு.ரவி.ரவீந்திரன் கனடா-பழைய மாணவர் சங்கம் எப்படி அமையவேண்டும் என்பதை விளக்கி மன்றம் அதற்கான யாப்பினை தயாரித்து பொதுமக்களின் கருத்துடன் அங்கீகாரம் பெற்று வழங்கப்படும் எனவும் அத்துடன் கனடாவில் அமைக்கப்படவுள்ள பழையமாணவர் சங்கங்கள் அனைத்தும் கனடா காரை கலாச்சார மன்றத்தில் தொடர்ந்து ஒற்றுமையுடன் இயங்குவதற்கு இந்த யாப்பு வழியமைக்கும் என்பதுடன் இம்மன்றங்கள் எதிர்காலத்தில் தனி அலகாக பிரிந்துபோகா வண்ணம் யாப்பில் சீர்திருத்தம் செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார் இந்த பழைய மாணவர் சங்கங்களுக்கு மன்றம் தம்மாலான உதவிகள் அனைத்தையும் வழங்கும் எனவும் தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து நிர்வாகத் தெரிவு நடைபெற்றது.

முதலில் தலைவராக கலாநிதி. தர்மலிங்கம் திருச்செல்வம் அவர்களும் செயலாளராக ஞானாம்பிகை குணரத்தினம், பொருளாளராக திரு. நடராசா பிரகலாதீஸ்வரன், உறுப்பினராக திரு.காரை ஆ.புண்ணியமூர்த்தி ஆகியோரும் தெரிவாகினர். இதனைத் தொடர்ந்து புதிய தலைவர் தமதுரையில் காரைநகர் இந்துக்கல்லூரியின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய முறையில் தான் கடமையாற்றுவேன் என்பதுடன் இப்பழைய மாணவர் சங்கம் கனடா காரை கலாச்சார மன்றத்துடன் இணைந்து செயலாற்றுவதுடன் இலங்கையின் முன்னணிப் பாடசாலைகளுடன் கல்வி விளையாட்டுத்துறையில் முன்னிலைவகிக்கும் ஒரு முதன்மைக் கல்லூரியாக விளங்கவைப்போம் எனவும் செயற்திறன் மிக்க ஏனைய பழைய பாடசாலை மாணவர்களும் இச்சங்கத்துடன் இணைத்துக்கொள்ளப்படுவர் எனவும் தெரிவித்திருந்தார். அத்துடன் கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.

Copyright 2011 News. Designed by Joomla 1.7 templates. All Rights Reserved.